Kamal: ‘திரையுலகின் பேரரசரே..’ உலகநாயகன் கமலை சிம்மாசனத்தில் அமர்த்திய ஸ்ருதிஹாசன்... கொல மாஸ் சாரே
சென்னை: கோலிவுட்டின் உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக காணப்படுகிறார்.
இந்நிலையில், திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்றோடு 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.
இதனை முன்னிட்டு அவரது மகள் ஸ்ருதி ஹாசன் போட்டுள்ள டிவிட்டர் பதிவும் போஸ்டரும் செம்ம வைரலாகி வருகிறது.

64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசன்: 1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என பால் வடியும் முகத்துடன் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கமல், பின்னாளில் ஹாலிவுட்டுக்கே சவால் விடுவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
அசிஸ்டெண்ட் டான்ஸ் மாஸ்டர், உதவி இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என திரையுலகில் கமல்ஹாசன் தொடாத இடங்களும் இல்லை, அவர் நிகழ்த்தாத சாதனைகளும் கிடையாது. சிவாஜியைத் தொடர்ந்து தமிழில் இருந்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ஒரு கலைஞனாக கமல்ஹாசன் காணப்படுகிறார். ஒரு நடிகனாக கமல் மேற்கொண்ட புதிய முயற்சிகள், தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது.
16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, தேவர் மகன், விருமாண்டி என கமலின் படங்களை பட்டியலிடுவது ரொம்பவே கடினம். இந்நிலையில் திரையுலகில் அறிமுகமாகி 63 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் கமல்ஹாசன். அதாவது 1960ம் ஆண்டு இதே நாளில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா வெளியாகியுள்ளது. இதன் மூலம் 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் கமல்.

இதனை கொண்டாடும் விதமாக கமல் ரசிகர்கள் 64இயர்ஸ் ஆஃப் கமல், கமலிஸம் என ஏராளமான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ஸ்பெஷல் போஸ்டருடன் ட்வீட் போட்டுள்ளார். அதில், "பல்வேறு ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகள், சவால்கள் என எல்லாவற்றையும் பார்த்துள்ள உலக நாயகனின் அயராத முயற்சிக்கு இடையில் எதுவும் வர முடியாது. 6 தலைமுறைகளாக திரையுலகில் இணையற்ற பேரரசர் கமல், சினிமாவில் தனது 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்" என ட்வீட் செய்துள்ளார்.
முக்கியமாக இந்த டிவிட்டர் பதிவில் ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்துள்ள கமலின் போஸ்டர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிம்மாசனத்தின் மீது கெத்தாக கமல் அமர்ந்திருக்க, அவரை சுற்றிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே முழக்கமிடுவதாக கிரியேட் செய்யப்பட்டுள்ளது. திரையுலகில் 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசனுக்காகவே இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











