மூன்றாம் பிறை 40ம் ஆண்டு கொண்டாட்டம்...வெளியாகிறது விழா சிறப்பு மலர்... வாசகர்கள் பங்கேற்க வாய்ப்பு
சென்னை : நடிகர் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1982ல் வெளியான படம் மூன்றாம் பிறை.
இந்தப் படம் தமிழ் சினிமாவின் மகத்தான காவியமாக இன்றளவும் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவையொட்டி இயக்குநர் வெற்றிமாறன் தலைமையில் சிறப்பு மலர் வெளியாக உள்ளது.

மூன்றாம் பிறை படம்
நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து கடந்த 1982ல் வெளியான படம் மூன்றாம் பிறை. இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து பாலுமகேந்திரா இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில் ஒன்றாக இன்றளவும் பார்க்கப்படும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் இசைஞானி.

சிறப்பான அனுபவம்
படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் அதற்கான நியாயங்களை கொடுத்திருந்தார் இயக்குநர். சில நிமிடங்களே படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவும் படத்தில் பேசப்பட்டார்.

அழகான உறவு
கமல், ஸ்ரீதேவி நடிப்பு வேறு லெவலில் இருந்தது. இவர்களின் அழகான உறவு, விஜி, சீனு கதாபாத்திரப் படைப்பு உள்ளிட்டவை படத்தை இன்றைய ரசிகர்களும் ரசிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. வளர்ந்த குழந்தையாக இருக்கும் இளம்பெண்ணை தாய்மை மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரம் கமலுக்கு.

தேசிய விருதுகள்
ஆயினும் ஸ்ரீதேவியின் நடிப்பு படத்தில் மெச்சப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற முறையில் பாலுமகேந்திராவிற்கும் நடிகர் என்ற பிரிவில் கமலுக்கும் தேசிய விருதை பெற்றுத்தந்தது என்றாலும் படத்தில் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருந்தது.

ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு
விபத்தில் சிக்கும் ஸ்ரீதேவி மனநலன் பாதிக்கப்பட்டு, மோசமான இடத்திலிருந்து கமலால் காப்பாற்றப்படுகிறார். தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்படும் அன்னியோன்யம் உள்ளிட்டவற்றை கவிதையாக காட்சிப்படுத்தியிருந்தார் பாலு மகேந்திரா. ஆனால் ஸ்ரீதேவிக்கு நினைவு திரும்பும்போது அவர் கமலை மறப்பது அவரால் மட்டுமல்ல நம்மாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவு.

நிறைவான அனுபவம்
இந்தப் படம் எந்த நாளிலும் ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தையே கொடுக்கும் என்றாலும் படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகளை வரும் 19ம் தேதியுடன் எட்டவுள்ளது. இதையடுத்து பாலுமகேந்திரா நூலகம், டைரக்டர் வெற்றிமாறன் தலைமையில் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளது.

விழா சிறப்பு மலர்
இந்த மலரில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் வாசகர்களும் பங்கேற்கும் வகையில் படம் திரையரங்கில் வெளியான கால கட்டத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளில் கட்டுரையாக எழுதி அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பங்கேற்க வாய்ப்பு
இவ்வாறு அனுப்பவர்களின் ஊர், படத்தை பார்த்த திரையரங்கம், அன்றைய மற்றும் இன்றைய புகைப்படங்கள் உள்ளிட்டவையும் கேட்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டுரைகளுக்கு ரூ 5 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











