Kamal X Rajini: அரசியலில் கமல் புது அத்தியாயம்.. ரஜினிகாந்த்தை சந்தித்து பேச்சு வார்த்தை!
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், நடிகரும் தனது நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது, வரும் 25ஆம் தேதி மாநிலங்களவையில் தான் உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பேசியும், அதற்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழையும் காட்டி வாழ்த்து பெற்றுள்ளார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படத்தை கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி, கமல்ஹாசன் வரும் 25ஆம் தேதி மாநிலங்களைவியில் உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருந்தது. அதில், “நாடாளுமன்றத்தில் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்பு. மக்கள் நீதி மய்யம் தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைச் சந்தித்து இது தொடர்பான சான்றிதழைக் காட்டி, மகிழ்ச்சி பொங்க வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன், புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன் என கேப்ஷனும் இட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். அப்போதே ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் படி I.N.D.I.A கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான தகவல்கள் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











