நடிகர் விக்ரமுடன் தேவர்மகன் 2-க்குத் தயாராகும் கமல் - இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல் தற்போது 'தேவர் மகன் 2' திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதி வருவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
தேவர் மகன் 2-ம் பாகத்தில் நடிகர் விக்ரம் கமலின் மகனாக நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், அத்திரைப்படத்தில் நாசரின் மகனாக ஃபகட் பாசிலும், விஜய் சேதுபதியும் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

மலையாள இயக்குநர்
கமலின் விஸ்வரூபம் 1, 2-ல் எடிட்டராகப் பணியாற்றியவர் மலையாள இயக்குநர் மகேஸ் நாராயணன். இவர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவரது இயக்கத்தில் நடிப்பதற்காக கமல் தற்போது ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அத்திரைப்படம் கமலின் தேவர்மகன் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகின்றது.

சூர்யாவா? விக்ரமா?
விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நட்புக்காக நடித்த சூர்யாவை, ராஜ் கமல் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, அவருடன் தானும் இணைந்து நடிக்கப் போவதை சில தினங்களுக்கு முன்பு கமல் உறுதிப்படுத்தினர். அது 'விக்ரம் 2' திரைப்படத்தின் சீக்வல் ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பு, 'தேவர்மகன் 2' திரைப்படத்தில் கமல் - சூர்யா இணைந்து நடிக்கவிருக்கின்றனர் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது, 'தேவர் மகன் 2' திரைப்படத்தில் விக்ரம் நடிப்பார் என்பது தற்போது பரவி வரும் புதிய தகவல் ஆகும்.

கடாரம் கொண்டான்
ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நடிகர் விக்ரமை வைத்து, 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தை இயக்கியது. பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் முக்கியமான பல காட்சிகள் மலேசிய தணிக்கையில் சிக்கி, மலேசியாவில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கமலுக்கும், நடிகர் விக்ரமுக்கும் இடையில் இன்னும் அந்த நட்புறவு நீடித்து வரும் நிலையில், கமலுடன் விக்ரம் இணைவதிலும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

விக்ரம் வசூல் சாதனை
இந்த கோவிட் காலக்கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 3 ஸ்கிரிப்ட்களை எழுதி கைவசம் வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், லோகேஸ் கனகராஜ் இயக்கிய விக்ரம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி 200 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்திருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் 500 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கமல் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இயக்குநர் லோகேசுக்கு காரும், உதவி இயக்குநர்களுக்கு பைக்கும் பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











