ஹேப்பி பர்த்டே ஆண்டவரே... கமல் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யங்கள்
சென்னை : நடிகர், அரசியல் கட்சி தலைவர், டிவி பிரபலம், பாடகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட பல திறமைகளைக் கொண்ட பன்முக கலைஞரான கமலஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் விக்ரம் படக்குழுவினர் கடந்த வாரமே ஷுட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடி விட்டனர். கமலுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நேற்று விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்சை வெளியிட்டனர். இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தனது நான்கரை வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான கமல், திரைத்துறையில் 65 வருடங்களை நிறைவு செய்துள்ளார். அவரை பற்றி அதிகம் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

முதல் படத்திலேயே விருது
சினிமா துறையில் பல சாதனைகள், பல பெருமைகள், புதுமைகளை கொண்டு வந்த கமல் 1960 ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் மகனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக ஜனாதிபதியிடம் தங்க பதக்கத்தை பெற்றவர் கமல்.

டான்ஸ் அசிஸ்டென்ட்
சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான கமல், பிறகு பள்ளி படிப்பில் கவனம் செலுத்தினார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, தங்கப்பன் என்ற படத்தில் டான்ஸ் அசிஸ்டென்டாக சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி ஆனார். 1971 ல் வெளிவந்த அன்னை வேளாங்கன்னி, 1973 ல் வெளிவந்த காசி யாத்திரை ஆகிய படங்களில் டான்ஸ் அசிஸ்டென்டாக பணியாற்றினார்.

சாதனைகளும் விருதுகளும்
கமல் இதுவரை 19 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், நான்கு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இதுதவிர 1984 ல் கலைமாமணி விருதினையும், 1990 ல் பத்மஸ்ரீ விருதினையும், 2014 ல் பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார். இது தவிர சிறந்த கலைஞர் மற்றும் எழுத்தாளருக்கு பிரான்ஸ் நாடு வழங்கும் சர்வதேச விருதான Ordre des Arts et des Lettres விருதினை 2016 ல் பெற்றவர் கமல்.

சமூக சேவையிலும் சாதனை
சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்பதற்காகவும் கமல் பலமுறை கெளரவிக்கப்பட்டுள்ளார். 2004 ல் ஆப்ரகாம் கோவூர் தேசிய விருதினை சமூக சேவை பங்களிப்பிற்காக பெற்றுள்ளார் கமல். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நலப்பணிகளுக்காக பயன்படுத்திய நடிகர்களில் கமலும் ஒருவர். தனது கமல் நற்பணி மன்றம் மூலம் கண்தானம் குறித்த விழிப்புணர்வு, கல்வி உதவி அளித்தல், ரத்ததான முகாம் உள்ளிட்ட பணிகளை கமல் செய்து வருகிறார்.

அரசியலிலும் தனித்துவம்
திரைத்துறையில் எப்படி பல திறமைகளுடன் தனித்துவமான கலைஞராக வலம் வருகிறாரோ அதே போல் அரசியலிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து விட்டார் கமல். 2018 ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கி, தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்து விட்டார் கமல்.


Click it and Unblock the Notifications











