Kamal: வேட்டையாடு விளையாடு வரிசையில் கமலின் அடுத்த சர்ப்ரைஸ்... ரீ-ரிலீஸாகும் பேசும் படம்!!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் கமலின் வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸாகி மீண்டும் வசூலில் சக்கைப் போடு போட்டது. அந்த வரிசையில் கமல் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றான 'புஷ்பக விமானம்' என்ற பேசும் படம் ரீ-ரிலீஸாகிறதாம்.

ரீ-ரிலீஸாகும் பேசும் படம் : உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம், ப்ளாக் ப்ஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல், ஆக்டிங், ஆக்ஷன், மேனரிஸம், ஸ்டைல் என அனைத்திலும் அதகளம் செய்திருந்தார். கமல்ஹாசனுக்கும் அவரது படங்களுக்கும் ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு காணப்படுவது வழக்கம். ஆனால், விக்ரம் திரைப்படத்துக்குப் பின்னர் இந்த வேகம் இன்னும் அதிகரித்தது.
இதனையடுத்து மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். முக்கியமாக கமல்ஹாசன் நடிப்பில் வரவிருக்கும் படங்கள் அனைத்துமே பக்கா கமர்சியல் ஜானரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, பிரபாஸுடன் இணைந்து கல்கி ஆகிய படங்களில் நடித்து வரும் கமல், அடுத்து வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனிடையே கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது. கெளதம் மேனன் - கமல் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், ரீ-ரிலீஸான போதும் வசூலில் மாஸ் காட்டியது. இதனால், அடுத்தடுத்து கமலின் சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஆளவந்தான் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என கலைப்புலி எஸ் தாணு கூறியிருந்தார்.
இந்நிலையில், கமல் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான பேசும் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே அபிஸியலாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய பேசும் படத்தில், கமலுடன் அமலா, சமீர் கக்கார், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசனங்கள் எதுவுமே இல்லாமல் மெளன படமாக வெளியான புஷ்பக விமானம், தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.
கமலின் கேரியரில் கிளாஸிக்கல் சினிமாவாக பேசும் படம் கொண்டாடப்படுகிறது. 1987ம் ஆண்டிலேயே வித்தியாசமான முயற்சிகளை ரொம்பவே ரிஸ்க் எடுத்து செய்துள்ளார் கமல். வசனங்களே இல்லாத மெளன படமாக இருந்தாலும் காமெடியில் கலங்கடித்திருப்பார் கமல். காதல், எமோஷன், சோகம், காமெடி என வெரைட்டியான விஷுவல் ட்ரீட்டாக அமைந்த பேசும் படம், 36 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ-ரிலீஸாக உள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











