புதிய காட்சிகளுடன் டிஜிட்டலில் வரும் “காமராஜ்” திரைப்படம்!
பழைய படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து வெளியிடுவது இன்றைக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற காமராஜ் திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு விரைவில் வெளியாகிறது.

கிங் மேக்கர்
1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர், பெருந்தலைவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தார்.

அப்பழுக்கற்றவர்
ஊழலே செய்யாதவர் என்று விரல் நீட்டி சொல்லக் கூடியவர்களை விரல் விட்டே எண்ணி விடலாம் அப்படிப்பட்டவர்களில் முதலில் இருப்பவர் காமராஜர். அதுவும் அவர் தமிழக மண்ணின் மைந்தர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

வெறும் ரூ 101-தான் சொத்து
1975 -ல் தலைவர் காமராஜர் இறந்த போது எஸ்டேட் டாக்ஸ் என்ற அரசாங்க சொத்து மதிப்பீட்டாளர்கள் காமராஜரின் சொத்து மதிப்பை கணக்கிட வந்தனர். அப்போதைய நடைமுறை அது.
அப்படி வந்தவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து இவர் ஏழை இல்லை... பரம ஏழை! மூன்று முறை முதல்வராக இருந்த இவர் இப்படியொரு ஏழையாக இருப்பார் என்று எதிர்பார்க்க வில்லை என்று ஆச்சர்யப்பட்டனர். காரணம் வாடகை வீடு, சட்டைப் பையில் 101 ரூபாய், சில கதராடைகள், கொஞ்சம் புத்தகங்கள் மட்டுமே அவரது சொத்தாக இருந்தது.

பாலகிருஷ்ணன்
அப்படிப்பட்டவரின் வாழ்கையை ரமணா கம்யூனிகேசன்ஸ் "காமராஜ்" என்ற பெயரில் உருவாக்கியது. அதை இப்போது டிஜிட்டல் மயமாக்கியதுடன் மேற்கொண்டு 15 புதிய காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள் இப்படம் மீண்டு திரைக்கு வர இருக்கிறது.

பிரதீப் மதுரம்
காமராஜராக இப்படத்தில் நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்து விட்டதால் அவரது மகன் பிரதீப் மதுரம் காமராஜராக நடித்திருக்கிறார் பெரியார் வேடத்தில் விஜயகுமார் நடிக்கிறார்.

பெருமை
காமராஜர் காந்தியின் வழியில் நின்று 9 வருடங்கள் சிறைவாசம் சென்றவர் .இரண்டு முறை அகில இதிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அவரது வாழ்கையை படமாக்கியத்தில் நான் பெருமை அடைகிறேன் என்கிறார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

இளையராஜா
புதிதாக இணைக்கப் பட்டுள்ள பல காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். அதில் அவர் ரஷ்யாவுக்கு பயணம் செய்த காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் மற்றும் டிஜிட்டல் முறையில் "காமராஜ்" மீண்டும் உலாவர இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











