ரூ.10க்காக.. காஞ்சனா 3 படம் பார்க்கப் போனவர் அடித்துக் கொலை.. பெங்களூருவில் பயங்கரம்!
பார்க்கிங் கட்டணம் தொடர்பாக காஞ்சனா 3 படம் பார்க்கச் சென்றவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் காஞ்சனா 3 படம் பார்க்கச் சென்ற இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெற்றிப் பட வரிசையில் இடம் பிடித்து விட்டது. ஒரே மாதிரியான பேய்ப் படம் என்ற விமர்சனம் கிடைத்த போதும், குடும்பத்துடன் மக்கள் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வதால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பரணிதரன் என்ற இளைஞர் காஞ்சனா 3 படம் பார்க்க பைக்கில் சென்றுள்ளார். படம் ஆரம்பித்து விட்டதால் வேகவேகமாக பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு அவர் தியேட்டருக்குள் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது, அவரிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் செல்வராஜ், ரூ. 10 கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் அப்போது சில்லறை இல்லை, படம் முடிந்ததும் பணத்தை தருவதாக பரணிதரன் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், அதற்கு செல்வராஜ் சம்மதிக்கவில்லை. இதனால், பரணிதரனுக்கும், அந்நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது கையில் இருந்த சாவியால் செல்வராஜை பரணிதரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் என்ற மற்றொரு திரையரங்க ஊழியரும், செல்வராஜும் பரணிதரனை மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை படம் பார்க்க வந்திருந்த நபர் ஒருவர் போலீசாருக்கு தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், பரணிதரனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செல்வராஜைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சேகரைத் தேடி வருகின்றனர். படம் பார்த்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











