வெறுப்புணர்வு உங்களை குருடாக்கிவிட்டது”.. ஏ.ஆர். ரஹ்மானை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்!
மும்பை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் விக்கி கௌஷல் நடித்த 'சாவா' திரைப்படத்தை
பிரிவினையை உருவாக்கும் படம் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து, நடிகையும், அரசியல்வாதியான கங்கனா ரனாவத் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன் மூலம், அவர் இயக்கிய 'எமர்ஜென்சி' திரைப்படம் தொடர்பான பழைய முரண்பாடுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
விக்கி கௌஷல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வரலாற்று திரைப்படம் 'சாவா'. இப்படம் குறித்து, பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த பேட்டியில், தனது கருத்துகளை பகிர்ந்தார். அதில்,, 'சாவா' பிரிவினையை உருவாக்கும் படம். மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி லாபம் ஈட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், அதன் மையக் கருத்து வீரத்தைக் கொண்டாடுவதே என்று பேசி இருந்தார். ஏ.ஆர் ரஹ்மானின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் அவரது கருத்துரைக்கும் உரிமையை ஆதரித்த நிலையில், மற்றவர்கள் இந்தக் கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகவும், திரைப்படத்தை நியாயமற்ற முறையில் முத்திரை குத்துவதாகவும் விமர்சித்தனர்.

நடிகை கங்கனா ரனாவத்: ஏ.ஆர். ரஹ்மானின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏ.ஆர். ரஹ்மானின் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்த்து, "அன்புள்ள @arrahman ஜி, நான் காவி சிந்தனையை ஆதரிப்பதால் திரைப்படத் துறையில் அதிக பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் சந்தித்து வருகிறேன். ஆனாலும், உங்களைவிட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை". இந்தப் பதிவு, 'சாவா' விவகாரத்தைத் தாண்டி, ரஹ்மானுடன் தமக்கு ஏற்பட்ட பழைய அனுபவங்களையும் அவர் நினைவு படுத்தி உள்ளார். தான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று ஒருகாலத்தில் விரும்பியதாக கங்கனா ரனாவத் கூறினார். ஆனால், அந்தப் படத்தின் கதையை சொல்ல அவரைச் சந்திக்கக்கூட ரஹ்மான் மறுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
உங்களை குருடாக்கிவிட்டது: "'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல விரும்பினேன். கதை சொல்லுவதைக் கூட விடுங்கள், என்னைச் சந்திக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். ஒரு 'பிரச்சாரப் படம்' என்பதால் அதில் இணைந்து கொள்ள விரும்பவில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது". 'எமர்ஜென்சி' படம் பின்னர் விமர்சகர்களாலும், அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூட அதன் "சமச்சீர் மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறைக்காக" பாராட்டப்பட்டது. "உங்கள் வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியுள்ளது. உங்களை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது" என்று கூறி, #Emergency என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி உள்ளார்.
'எமர்ஜென்சி': கங்கனா ரனாவத் கடைசியாக நடித்த 'எமர்ஜென்சி' படத்தை அவரே இயக்கி, தயாரித்து வெளியிட்டார். 1975 முதல் 1977 வரை இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 21 மாத அவசரநிலைக் காலத்தையும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. அதிக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதில் அனுபம் கெர், ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் மிலிந்த் சோமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











