திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி.. நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட் கைது
பெங்களூரு: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் மெய் காப்பாளர் ஒருவரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவில் ஈடுபட்டு மோசடி செய்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து தப்பி கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கி இருந்த நிலையில், மும்பை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தலைவிக்கு தலைவலி
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தலைவி நடிகைக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் விதமாக அவரது மெய்க்காப்பாளரான குமார் ஹெக்டே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவில் ஈடுபட்டு தப்பிச் சென்ற குற்றத்திற்காக சிக்கி உள்ளார்.

பொய்யான வாக்குறுதி
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தான் பெரிய இடத்தில் வேலை பார்ப்பதாகவும், நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஏகப்பட்ட பொய்யான உறுதிமொழிகளை கூறி உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது தேவை பூர்த்தியானதும் அந்த பெண்ணிடம் இருந்து எஸ்கேப் ஆகி சொந்த ஊரில் தஞ்சம் அடைந்து விட்டார் அந்த மோசடி மெய்க்காப்பாளர்.

கண்ணீருடன் புகார்
நடிகை கங்கனா ரனாவத்தின் மெய்க்காப்பாளரான குமார் ஹெக்டே தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் உறவில் இருந்து வந்தார். ஆனால், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் மும்பை போலீசாரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

தூக்கிய போலீஸ்
மும்பையில் இருந்து குமார் ஹெக்டேவின் சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஹெகதஹல்லிக்கு வந்த மும்பை போலீசார் குமார் ஹெக்டேவை நேற்று (சனிக்கிழமை) தட்டித் தூக்கி உள்ளனர். மும்பைக்கு கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் பரபரப்பு
நடிகை கங்கனா ரனாவத்தின் பாடிகார்ட் ஒருவர் இது போன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ள செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கங்கனா ரனாவத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட மெய்க்காப்பாளருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











