ஜெயலலிதாவின் நினைவு தினம்.. புதிய ஸ்டில்களை வெளியிட்ட 'தலைவி' கங்கனா.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நடிகை கங்கனா, தலைவி படத்தின் சில ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக உலா வந்தவர் ஜெயலலிதா. உடல் நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

நினைவிடத்தில் அஞ்சலி
அவரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் உள்ள அவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட அமைச்சர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதிய புகைப்படங்கள்
இந்நிலையில், ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவி படத்தின் சில புதிய ஸ்டில்களை நடிகை கங்கனா ரனாவத், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே #Thalaivi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது.

ஜானகியாக மதுபாலா
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாகி வருகிறது. இதில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக, மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
சசிகலாவாக பூர்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர். படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

படப்பிடிப்பு முடியும்
ஆனால் கொரோனா வைரஸ் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ஷூட்டிங் தொடரவில்லை. தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. இன்னும் ஒரு வாரத்தில் இதன் படப்பிடிப்பு முடியும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











