Suriya: சரமாரியாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்.. மன்னிப்பு கேட்ட சூர்யா.. என்ன நடந்தது?
மும்பை: நடிகர் சூர்யாதான் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் டாப் ஆஃப் த டாப்பிக்காக உள்ளார். இவரது நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால், இணையத்திற்குள் நுழைந்தாலே கங்குவா படத்தின் அப்டேட்களும் புரோமோசன் விபரங்களுமே குவிகின்றது. இப்படியான நிலையில் கங்குவா படக்குழு நேற்று அதாவது நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் புரோமோசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொண்ட சூர்யாவை பத்திரிகையாளர் ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்டது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு நாளை வெளியாகவுள்ளது.

படத்தினை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு சிறப்பாக திட்டமிட்டு நாளை வெளியிடுகின்றது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படம் ரூபாய் 2000 கோடிகள் வரை வசூல் செய்யும் என தொடர்ந்து கூறிக்கொண்டு உள்ளார். படத்தினை மொத்தம் இரண்டு பாகங்களாக படக்குழு எடுத்துள்ளது. கங்குவா படம் இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான மற்றப் படங்களை விட அதிக பொருட்செலவில் உருவான படம். அதேபோல், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இதுதான்.

திட்டம்: தொடக்கத்தில் படத்தினை அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அறிவித்தது. ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், படம் ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படவில்லை எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தால், படத்திற்கு இந்த அளவுக்கு அதிக தியேட்டர்கள் இந்தியா முழுவதும் கிடைத்திருக்காது என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

புரோமோசன்: படத்தின் புரோமோசன் பணிகள் தலைநகர் டெல்லியில் இருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மெட்ரோ நகரங்களில் கடந்த ஐந்து ஆறு வாரங்களாகவே நடைபெற்று வருகின்றது. சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், ஏற்கனவே புரோமோசன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட மெட்ரோ நகரங்களில், சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பினை படக்குழு நடத்தி வருகின்றது. அதில் கலந்து கொள்ள படக்குழு பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் நேற்று மாகாராஸ்ட்ரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில், படக்குழு தரப்பில் இருந்து, சூர்யா, இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் படத்தின் டிஸ்டிபூட்டர்ஸ் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுவதாக படக்குழு அறிவித்த நேரத்தில் இருந்து, படக்குழு தாமதமாகவே வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே படக்குழு அறிவித்த நேரத்தில் செய்தியாளர்கள் அங்கு சென்றுவிட்டனர்.

மன்னிப்பு: இதனால் செய்தியாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், கோபமான பத்திரிகையாளர் ஒருவர், சூர்யாவை இடைமறித்து தனது கையில் கட்டியுள்ள வாட்சைக் காட்டி, எத்தனை மணிக்கு செய்தியாளர் சந்திப்பு எனக் கூறினீர்கள்? இப்போது எவ்வளவு நேரம் ஆகியுள்ளது? நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது? உள்ளிட்ட சரமாரியான கேள்விகளைக் கேட்டார். உடனே சூர்யாவோ, மற்ற இடங்களுக்குச் சென்று வருவதில் தாமதமாகிவிட்டது எனக்கூறி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











