கங்குவாவில் இது இருக்காது.. சூர்யா காஸ்ட்யூம் வெயிட்.. ஒளிப்பதிவாளர் வெற்றி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நாளை வெளியாகிறது. கிட்டத்தட்ட 30 மொழிகளில் படம் ரிலீஸாகிறது. கண்டிப்பாக இந்தப் படம் 2000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்து கூறிவருகிறார். இதனால் சூர்யா ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகப்போகின்றன. எனவே இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும் சூர்யாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் சக்கைப்போடு போட்டிருப்பதாகவும்; அதனால் படக்குழு ஹேப்பியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2000 கோடி ரூபாய் வசூல்: இந்தப் படத்தின் மீது ஞானவேல் ராஜா உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தான் கொடுக்கும் சில பேட்டிகளில், 'கங்குவா படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் ' என்று கூறினார். அதேபோல் சூர்யா ஒரு விழாவில் பேசுகையில், 'கங்குவா படத்தை அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள். இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என ஆச்சரியம்தான் படுவார்கள்' என்றும் கூறினார். இது ஒருபக்கம் இருக்க இந்த ஹைப்புகளை பார்க்கும்போது அஞ்சான் படம் நியாபகத்துக்கு வருவதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் சொல்லவும் தவறவில்லை.
மழை பயம்: இப்படி படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு நாளை ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 10,000 திரைகளில் படம் திரையிடப்படுவதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதேசமயம் இன்னும் சில நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால்; படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் அவரது ரசிகர்களிடம் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
வெற்றியின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கங்குவா படம் வித்தியாசமானதாக இருக்கும். பொதுவாக வரலாற்று படம் என்றால் கோட்டைகள் இருக்கும்; பலர் வேல், வாளை பிடித்துக்கொண்டு சைடில் நிற்பார்கள். ஆனால் கங்குவா படத்தில் இதெல்லாம் இருக்கவே இருக்காது. பூர்வகுடி மக்களின் நிலையை பேசும்படியாக இயல்பாகத்தான் இந்தப் படத்தை சிவா கொண்டு சென்றிருக்கிறார். அதாவது சில தீவுகள் படத்தில் இருக்கும். அதில் பெருமாச்சி என்பது கங்குவாவின் தீவு. ஆரத்தி என்பது உதிரன் (பாபி தியோல்) தீவு. இதை வைத்துதான் படம் நகரும்.
சூர்யா செம: சூர்யாவுடன் நான் பணியாற்றும் முதல் படம் இது. அதில் எனக்கு என்ன ஒரு சந்தோஷம் என்றால் அவருடன் பணியாற்றும் முதல் படமே வரலாற்று சார்ந்த படமாக இருப்பதுதான். கடுமையாக உழைத்திருக்கிறார் சூர்யா. முக்கியமாக அவர் படத்தில் அணிந்திருக்கும் ஆடை மிகவும் கனம் வாய்ந்தது. அதை போட்டுக்கொண்டு நடப்பதே கஷ்டம். ஆனால் அவரோ சண்டையெல்லாம் அசால்ட்டாக செய்தார். அதை பார்க்கும்போது யார் இவர் இவ்வளவு உழைக்கிறாரே என்று எனக்கு தோன்றியது. படத்தில் ஆக்ஷன் சீன்கள் எல்லாம் மிக அருமையாக வந்திருக்கின்றன. கங்குவா படத்துக்கு நூறு மதிப்பெண்கள் கொடுத்தால் சூர்யாவுக்கு 99 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்த அளவுக்கு படத்தை தாங்கி சென்றிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











