சூர்யாவுக்கு கங்குவா அடுத்த அஞ்சான்.. அதான் ஓவர் வாய் கூடாதாம்.. வறுக்கும் ரசிகர்கள்.. நிலைமை மோசம்
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே பெரும்பாலும் கொடுத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் சூர்யாவை ரசிகர்களில் ஒருதரப்பினர் கடுமையாக கிண்டல் செய்துவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமாவுக்குள் நுழைந்தபோது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த அவர்; பாலாவின் பட்டறைக்குள் சென்று பட்டை தீட்டப்பட்ட வைரமாக நடிப்பில் மின்ன ஆரம்பித்தார். தொடர்ந்து தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் தன்னையே அர்ப்பணித்து நடித்ததால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் படங்கள், மறுபக்கம் கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்கள் என இரட்டை குதிரையில் லாவகமாக பயணம் செய்தார்.

கங்குவா: சூழல் இப்படி இருக்க அவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நிறைவடைந்த சூழலில் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் அவர். ஏற்கனவே அண்ணாத்த படத்தை இயக்கி பெரும் சேதாரத்தை கண்ட சிவா; சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார் என்பதால் அவரது ரசிகர்கள் வயிற்றில் புளி கரையத்தான் செய்தது. இருந்தாலும் சிவா கண்டிப்பாக இந்தப் படம் நல்ல படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.
ஓவர் ஹைப்: நிலைமை இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் ப்ரோமோஷன்களில் கங்குவா பற்றிய ஹைப் ஓவராகவே ஏற்றப்பட்டது. படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று முதல் திரியை பற்ற வைத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன இவரு இப்படியெல்லாம் சொல்றாரு. சேதாரம் வந்துவிடுமோ என்று கமெண்ட்ஸை பறக்கவிட ஆரம்பித்தார்கள். ஆனால் ஞானவேல் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து படத்துக்கு ஹைப் ஏற்றினார்.
சூர்யாவின் பங்கு: சரி பணம் போட்ட தயாரிப்பாளர் இப்படித்தான் பேசுவார் என்று ரசிகர்கள் மனதை தேற்றிய சமயத்தில்; சூர்யாவோ ஒரு ப்ரோமோஷனில் பேசுகையில், 'கங்குவா படத்தை ரசிகர்கள் வாயை பிளந்துகொண்டு பார்ப்பார்கள். இந்தியாவில் இப்படி ஒரு சினிமா எடுக்க முடியுமா என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்' என்று கூறி எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றினார். அதனை கேட்ட ரசிகர்களோ அய்யோ சூர்யாவும் என்ன இப்படி இறங்கிட்டாரே அச்சத்தில் அதிகமாக உழன்றனர்.
இன்று ரிலீஸ்: நிலைமை இப்படி இருக்க கங்குவா திரைப்படம் இன்று உலக அளவில் ரிலீஸானது. மொத்தம் 30 மொழிகளில், 10,000 திரைகளில் 3டியில் படம் வெளியானது. ஞானவேல் ராஜா, சூர்யா உள்ளிட்டோர் கொடுத்த உச்சக்கட்ட ஹைப்போடு படம் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். முக்கியமாக 2,000 கோடி ரூபாய் வசூல் செய்யும் அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த அஞ்சான்: ஆனால் படம் பார்த்த ரசிகர்களோ கடும் அப்செட்டாகியிருக்கின்றனர். படத்தின் கதை, மேக்கிங், இசை என எதுவுமே தேறவில்லை. பீரியட் கால படம் என்ற பெயரில் எதை எதையோ எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தப் படம் 2,000 கோடி ரூபாய் இல்லை 100 கோடி ரூபாய் வசூல் செய்வதே அதிசயம் என்று ஓபனாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்தார் சூர்யா. அப்போது பேசிய லிங்குசாமி, 'கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன்' என்று சொல்லி ஹைப் ஏற்றினார். ஆனால் அந்தப் படம் எவ்வளவு பெரிய தோல்வி என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆக ஓவர் வாயால் அதிக ஹைப் ஏற்றினால் படம் எப்படி தோல்வியடையும் என்று சூர்யா ஏற்கனவே தன்னுடைய படத்திலேயே பாடம் கற்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு கங்குவாவுக்கு ஏன் இப்படி அதிகம் வாயை விட்டார்கள் என்று தெரியவில்லை. கங்குவா சூர்யாவுக்கு அடுத்த அஞ்சானாக மாறிவிட்டது என்று கிண்டல் செய்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











