வேட்டையன் பராக்.. பின்வாங்குகிறதா கங்குவா?.. சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படும் சூழலில் இப்போது படத்தின் ரிலீஸ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.
சூர்யா நடிப்பில் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர்; வாடிவாசல் படத்திலும் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார்.

பிரமாண்ட பட்ஜெட்: இந்தப் படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்ததால் இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார் அவர்.
வரவேற்பை பெற்ற கங்குவா: கோலிவுட்டில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது கங்குவா. படத்திலிருந்து வெளியான க்ளிம்ப்ஸ், டீசர், ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் கண்டிப்பாக கங்குவா படத்தின் வெற்றி அதன் பட்ஜெட் போலவே பிரமாண்டமாக இருக்கும் என்று கணித்திருக்கின்றனர். படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் நன்றாகவே போயிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களை பெற்றது.
வேட்டையன் VS கங்குவா: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த நாளில்தான் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினியுடன் சூர்யா தைரியமாக போட்டியிடுகிறாரே தப்பித்துவிடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
பின்வாங்கும் கங்குவா?: ஆனால் இப்போது வேறு மாதிரியாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதாவது வேட்டையனுடன் மோதுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் நினைக்கிறார்கள் என்றும்; அதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ரஜினியுடன் நாங்கள் போட்டிக்கு இறங்கமாட்டோம் என்று ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











