சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகர் கொரோனாவுக்குப் பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பெங்களூரு: கொரோனாவுக்கு மூத்த நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

அமிதாப்பச்சன்
இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர், அமிதாப்பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹுலிவானா கங்காதர்
இந்நிலையில் கன்னட திரையுலகின் மூத்த நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 70. இவர் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துளார். 150-க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது.

மூச்சுத்திணறல்
அவர், பிரேம லோகா என்ற டிவி தொடருக்கான படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இருந்தாலும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவரைக் கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சை
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். மறைந்த ஹுலிவானா கங்காதருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினரும் அவர் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மூத்த நடிகர் ஒருவர் கொரோனாவுக்குப் பலியாகி இருப்பது திரையுலகில் பரபரப்பாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications