செக் மோசடி வழக்கில்.. பிரபல நடிகைக்கு 3 மாதம் சிறை!
பெங்களூர்: காசோலை மோசடி வழக்கில் மூத்த கன்னட நடிகை பத்மஜா ராவுக்கு மங்களூர் நீதிமன்றம் 3 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்தி சிறைத் தண்டனையைத் தவிர்க்கவும் நீதிமன்றம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது.
பிரபல நடிகையான பத்மஜா ராவ், திரைப்படங்கள் மட்டுமில்லாமல், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், கன்னடத் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவை பெற்ற "பாக்யலட்சுமி"என்ற சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் துளு மற்றும் கன்னட திரைப்பட இயக்குனரும் நடிகருமான வீரேந்திர ஷெட்டிக்கு சொந்தமான வீரு டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, ரூ.40 லட்சத்தை கடனாக வாங்கி உள்ளார்.

பிரபல நடிகை பத்மஜா ராவ்: இந்த கடனை பத்மஜா, பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போதும் அவர் அதனை திருப்பி செலுத்தவில்லை. கடனைத் திருப்பித் தருமாறு வீரேந்திர ஷெட்டி பல முறை கேட்ட போதும் போக்கு காட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து வீரேந்திர ஷெட்டி கடனை கொடுத்தே ஆக வேண்டும் என அழுத்தம் கொடுக்க, பத்மஜா ஒரு காசோலையை வழங்கி உள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால், அந்த காசோலை பவுன்ஸ் ஆனது.
காசோலை மோசடி: இதுகுறித்து, வீரேந்திர ஷெட்டி மங்களூர் ஜேஎம்எப்சி 8வது நீதிமன்றத்தில் பத்மஜா ராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும், பத்மஜா ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய பெங்களூரு தலகட்டபுரா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள் பத்மஜா ராவ் மங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.
மூன்று மாத சிறை: நான்கு ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, தற்போது பத்மஜா ராவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீரேந்திர ஷெட்டிக்கு ரூ.40,17,000 மற்றும் இழப்பீடாக ரூ.3,000 அரசுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த தவறினால், மூன்று மாத சிறை தண்டனையை பத்மஜா ராவ் அனுபவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











