பல் வலிக்கு சிகிச்சை.. வீங்கியது முகம்.. கதறும் நடிகை.. நடந்தது என்ன?
பெங்களூர் : கர்நாடகாவில் பல் வலிக்கு சிகிச்சை எடுத்த பிரபல நடிகையின் முகம் வீங்கியதால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி, இவர் கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இளம் நடிகையான சுவாதியின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை சுவாதி
நடிகை சுவாதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சுவாதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பல் வலி குறைய மருந்துக்குப் பதில் ஊசி ஒன்றை பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து சுவாதி அந்த ஊசியை போட்டுள்ளார்.

பதறிய சுவாதி
ஊசியை போட்டுக்கொண்ட சில மணி நேரத்திலேயே சுவாதியின் முகம் மற்றும் ஊதடு வீங்கி காணப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன நடிகை மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஊசி போட்டதால் சில மணி நேரத்திற்கு அப்படித்தான் இருக்கும் என்றும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை விரைவில் வீக்கம் வற்றிவிடும் என்று கூறி உள்ளனர்.

வீக்கம் குறையவில்லை
ஆனால், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாகியும் வீக்கம் குறையவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுவாதி மீண்டும் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்துள்ளதாக நடிகை சுவாதி குற்றம் சாட்டி உள்ளார்.

வீட்டில் முடங்கி இருக்கிறேன்
முகம் வீங்கி உள்ளதால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கேட்டால், அவர் சரியாகிவிடும் என்று மட்டுமே சொல்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாகியும் வீக்கம் குறையவே இல்லை. இதனால் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கிறேன். நான் ஒரு நடிகை எனக்கு நடித்தால் தான் வருமானமே என நடிகை சுவாதி கண்ணீருடன் அந்த மருத்துவமனை மீது குற்றம்சாட்டி உள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை மரணம்
பெங்களூருவின் ராஜாஜி நகரில் இயங்கி வரும் ஷெட்டி காஸ்மெட்டிக் மையத்தில் கடந்த மாதம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட 21 வயதே ஆன நடிகை சேத்தனா ராஜ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த நிலையில், தற்போது, பல் வலிக்காக சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கி உள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











