அழுகிய நிலையில் கிடந்த பிரபல இயக்குநரின் உடல்.. திரையுலகினர் அதிர்ச்சி!
பெங்களூர்: பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் குரு பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குரு பிரசாத் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், இதனால், இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபிரசாத் 2006 ஆம் ஆண்டு மாதா என்ற படத்தை இயக்குநராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமே சிறப்பான படமாக அமைந்ததால், கன்னட சினிமாவில் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, 2009ம் ஆண்டு எட்டெலு மஞ்சுநாதா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை பெற்றார். இதையடுத்து, ஸ்பெஷல், எரடனே சாலா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குநர் குருபிரசாத்: இந்நிலையில், இயக்குனர் குரு பிரசாத் பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 52. இவர் கடந்த 8 மாதங்களாக பெங்களூரு வடக்கு பகுதியில் உள்ள மதநாயக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து குடியிருப்ப வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அழுகிய நிலையில் உடல்: இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குரு பிரசாத் தூக்கில் தொங்கியபடி இருந்தார். குரு பிரசாத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபரீத முடிவு: அதில், குரு பிரசாத் கடுமையாக பண நெருக்கடியில் இருந்ததாகவும், அந்த பகுதி மக்களிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் குரு பிரசாந்த் இயக்கிய ரங்கநாயகா திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. குரு பிரசாத் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











