பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீர் மாரடைப்பு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை
பெங்களூரு: கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Recommended Video
ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை மோசமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மாரடைப்பு
கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐசியூவில் சிகிச்சை
46 வயதாகும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் புனித் ராஜ்குமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் கன்னட திரையுலக ரசிகர்களும் புனித் ராஜ்குமாரை பார்ப்பதற்காக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனை முன்பாக குவிந்து வருகின்றனர்.

ஜிம்மில் பயிற்சி
இன்று காலை ஜிம்மில் வழக்கம் போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நடிகர் புனித் ராஜ்குமாருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளங்களில் நடிகர் புனித் ராஜ்குமார் பூரண குணமடைய ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிவராஜ்குமாரை வாழ்த்தி இருந்தார்
இன்று காலை தனது சகோதரரும் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிவராஜ்குமாரின் பஜ்ரங்கி 2 படம் ரிலீசாகி உள்ள நிலையில், அந்த படம் வெற்றி பெற நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பஜ்ரங்கி 2 படக்குழுவினருக்கு இன்று காலை 7.33க்கு வாழ்த்துக்கள் கூறி ட்வீட் போட்டிருந்தார் புனித் ராஜ்குமார்.

குழந்தை நட்சத்திரம்
1976ம் ஆண்டு வெளியான ராஜ்குமாரின் பிரேமத கனிகே படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் ராஜ்குமார் எனும் பெயரில் சினிமாவில் அறிமுகமானவர் புனித் ராஜ்குமார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த 2002ம் ஆண்டு வெளியான அப்பு எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

பிளாக்பஸ்டர் படங்கள்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் 2007ல் வெளியான அரசு படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். தொடர்ந்து மிலானா, வம்சி, ராஜ், ஜாக்கி, ஹுடுகாரு, பவர், ரண விக்ரமா, ராஜகுமாரா, யுவரத்னா என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











