அரசியலுக்கு வந்து தான்.. அதைச் செய்யனும்னு இல்லை.. கன்னட நடிகர் சிவராஜ்குமார் பளிச்!
சென்னை: ஜனவரி 9ஆம் தேதி தமிழ் திரையுலகிலும் சரி, தெலுங்கு திரையுலகிலும் சரி, கன்னட திரையுலகிலும் சரி, உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. தமிழில் விஜயின் ஜன நாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகவுள்ளது. இதில் பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் தெலுங்கில் பிரபாஸில் தி ராஜா சாப் படம் வெளியாகவுள்ளது. அதேபோல் கன்னடத்தில் சிவ ராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள 45:தி மூவி படம் வெளியாகவுள்ளது.
இதில் 45:தி மூவி படத்தின் புரோமோசன் வேலைகள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவ ராஜ்குமாரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர்.

அப்போது அவர் அளித்த பதில் யாரும் எதிர்பார்க்காத பதில். காரணம், கன்னட திரையுலகில் அவரது அப்பா சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர். இவரது மொத்த குடும்பமும் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தவர்கள். இவரது சகோதரர் புனித் ராஜ்குமார் தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்பட்ட நடிகர். இப்படி இருக்கும்போது, பத்திரிகையாளர்களின் கேள்வியும் சிவ ராஜ்குமாரின் பதிலும் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. நான் இப்போது உள்ள இந்த நிலையில் இருந்தும் நல்லது செய்யலாம். நான் நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இவரது இந்த பதில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள 45:தி மூவி படத்தில் சிவ ராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த புரோமோசன் விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாட்டில் சிவ ராஜ்குமார் படத்திற்கு எந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











