அடுத்த வாரம் தள்ளிப்போன கார்த்தியின் ‘வா வாத்தியார்’.. டிசம்பர் 5 வெளியாகும் ‘கண்ணகி நகர்’
சென்னை: டாக்டர் ராஜீவ் மாதவன் மேனன் தயாரிப்பில் உருவான 'கண்ணகி நகர்’ திரைப்படம் டிசம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜீவ் மேனன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரேமாலையா ஸ்டூடியோஸ் விநியோகிக்கும் இப்படம், தன்னிச்சையான கதைக்களம், நேர்த்தியான நடிப்பு மற்றும் தேவா இசையுடன் உணர்வுகளைத் தூண்டும் படைப்பாகும்.
டிசம்பர் 5ம் தேதி கார்த்தி நடித்த 'வா வாத்தியார்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணகி நகர் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. பாலகிருஷ்ணாவின் அகண்டா 2, ரன்வீர் சிங்கின் துரந்தர் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகிறது.
இயக்குநர் தீனா எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், சுனாமியால் பெற்றோரை இழந்த குட்டி, மீனாவின் வாழ்க்கையை மையப்படுத்துகிறது. மீனா மர்மமாக காணாமல் போனதை அடுத்து, குட்டியின் மனதில் துயரம், குழப்பம், கோபம், பழிவாங்கும் எண்ணங்கள் குடிகொள்கின்றன.

மன உளைச்சலில் வாடும் இளைஞர்களுக்கு உதவும் ஓர் தன்னார்வ அமைப்பின் தலைவரின் ஆதரவுடன், குட்டி ஒரு ஆபத்தான பாதையைத் தேர்வு செய்கிறான். மீனாவைத் தேடி தாய்லாந்து வரை நீளும் அவனது இந்தப் போராட்டம், கதையின் இறுதியில் மனதை உலுக்கும் உணர்வுப்பூர்வமான திருப்பத்தை வழங்குகிறது.
கௌதம், தீபா உமாபதி, முத்துராஜ், பாலசிங், கோ. ரவிராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உயிர்வாழ்வின் வேதனை, மன உளைச்சல், கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் போன்ற கருப்பொருள்களை இப்படம் ஆழமாக ஆராய்கிறது.
மொஹம்மது ஃபர்ஹானின் ஒளிப்பதிவும், மரீஷ் கே. மணிகண்டனின் படத்தொகுப்பும் இணைந்து, படத்திற்கு யதார்த்தத் தன்மையையும், நெடுக பதட்டத்தையும் உருவாக்குகின்றன.

சுமார் ₹3.5 கோடி செலவில் உருவான இந்தப் படத்தின் ரன் டைம் ஒரு மணி 47 நிமிடங்கள் ஆகும்.
“நகர்ப்புற இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் திரைப்பட அனுபவம் தான் 'கண்ணகி நகர்’,” என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
தமிழில் முழுமையாக உருவான இப்படம், இந்திய பண்பாட்டின் நுணுக்கங்களையும், வண்ணமிகு காட்சிப்பதிவையும் இணைத்து, பார்வையாளர்களுக்கு வலுவான திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











