Kannappa Blue Sattai Maran Review: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்ற படம்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு படத்தின் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். அதேபோல் படத்தில் சரத்குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன்பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " காளஹஸ்தி பகுதியில் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஐந்து மலைக் கிராமமாக பிரிந்துள்ளார்கள். அங்குள்ள ஒரு ஊரில் சிறுவன் ஒருவன் உள்ளான். அவன் அங்குள்ள கோவிலில் நரபலி செய்தால் இனம் நன்றாக இருக்கும் என தனது நண்பனை நரபலி கொடுக்கிறார்கள். இதனைத் தடுக்க அந்த சிறுவன் முயற்சிக்கிறான் ஆனால் தடுக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தால் கடவுளையே அவர் வெறுத்து நாத்திகனாகவே வாழ்கிறான்.
கோவில்களில் ஏன் ஆடுகளை வெட்டுகிறார்கள் என்றால் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், தொழில் நன்றாக இருக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் இந்த சிறுவன் ஆட்டையே காப்பாற்ற முடியாத கடவுள் நம்மை எப்படி காப்பாற்றும் எனக் கேள்வி கேட்கிறான். இதனால் அந்த சிறுவன் அறிவாளியாக உள்ளான். அந்த சிறுவன் வளர்ந்த பின்னர், ஒரு கட்டத்தில் எப்படி தீவிர சிவ பக்தனாக மாறினான் என்பதுதான் கதை.

நம்பியார் காலத்து ஸ்டைல்: அவர் எப்படி ஆத்திகராக மாறினார் என்பதை ஆவலுடன் பார்க்க காத்திருந்தால், பழைய எம்.ஜி.ஆர் படத்தில் நடிகையை கடத்திக் கொண்டு போவார்களே அதேபோல் இந்த படத்திலும் கதாநாயகனை கடத்திக் கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஆத்திகனாக மாற்றுகிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே இது கண்ணப்ப நாயனாரின் கதை எனவும் காளஹஸ்தியில் எப்படி கோவில் உருவானது எனவும் சில புனைவுகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறிவிடுகிறார்கள்.
தரமான படம்: இந்த படத்தின் கதை கட்டுக் கதையாக இருந்தாலும் சரி, புனையப்பட்ட கதையாக இருந்தாலும் சரி, சினிமாவுக்காக சில மாறுதல் செய்யப்பட்ட கதையாக இருந்தாலும் சரி, படமாக எப்படி உள்ளது என்று கேட்டால், நிச்சயமாக தரமான படமாக உள்ளது எனக் கூறலாம். படம் பார்ப்பவர்களை முட்டாள் என நினைக்காமல் தரமான படத்தைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு என்ன செலவு செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்துள்ளார்கள்.
படம் சூப்பர்: படத்தின் லொக்கேஷன்கள் எல்லாம் சிறப்பு. படம் முழுவதும் நியூசிலாந்தில் எடுத்திருப்பார்கள் போல, அவையெல்லாம் மிகவும் பிரமாதமாக இருந்தது. ஒளிப்பதிவும், கிராஃபிக்ஸ் காட்சிகளும் அருமையாக இருந்தது. அதேபோல் காஸ்ட்யூம், மேக்கப், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் சூப்பர். முதல் பாதி நன்றாக இருந்தது, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் படமாக போர் அடிக்கவில்லை. இந்த படத்தை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்தார்கள் என்றால், இன்றைக்கு உள்ள டெக்னாலஜியில் வித்தியாசமான சாமி படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











