Sir Box Office Day 2: நாளுக்கு நாள் சார்-க்கு கூடும் மதிப்பு.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் நிலவரம் என்ன?
சென்னை: சார் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தினை நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப் பெற்றது. இந்நிலையில் சார் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றி வெளியிட்டுள்ளார்.
படத்தில் விமல், சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் வெளியாகி முதல் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் நடை பெற்ற விழாவில், படத்தினை வெளியிட்ட இயக்குநர் வெற்றி மாறன் பேசுகையில், "இந்தப் படத்தில் நான் இணைந்திருப்பதால் படம் மக்களை சென்றடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. படம் நன்றாக இருந்தால், அது எந்தப் படமாக இருந்தாலும் எல்லோரிடமும் கண்டிப்பாகச் சென்றடையும். எனக்கு ஏற்புடைய படத்தில் என்னுடைய பெயர் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு படத்தின் கதைகள் இருந்தால் அந்தப் படங்களை தயாரிக்க ஒப்புக்கொள்வேன். சார் படத்தினைப் பொறுத்தவரையில், படத்தில் நான் எதுவும் செய்யவில்லை. படக்குழுவினரே சிறப்பாக அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது, "நான் முதல் படம் (கன்னி மாடம்) எடுத்தபோது பத்திரிகையாளர்களும் மக்களும் படத்திற்கு கொடுத்த ஆதரவு, அதனால் ஏற்பட்ட நம்பிக்கைதான் என்னை இரண்டாவது படத்தினை எடுக்க வைத்துள்ளது. படம் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் உருவாக்கப்பட்டுள்ள பள்ளி எனது கற்பனைப் பள்ளி. இதில் நான் என் வாழ்க்கையில் சந்தித்த எனது ஆசிரியர்களின் கதாபாத்திரமும் உள்ளது. வெற்றி மாறன் சார் படத்தினை ரிலீஸ் செய்கின்றேன் எனக் கூறிய பின்னர்தான், படத்திற்கு ஊடக வெளிச்சம் கிடைத்துள்ளது" என பேசியிருந்தார்.

ஆடியன்ஸ்: படம் பார்த்த மக்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களையே அளித்தனர். குறிப்பாக ஏற்கனவே எடுத்த கதையைத்தான் எடுத்துள்ளார்கள். படத்தில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. படத்தில் சரவணனின் நடிப்பு மிகவும் அட்டகாசமாக உள்ளது. போகுமிடம் வெகுதூரமில்லை படத்திற்குப் பிறகு விமல் நடிக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்போடு வந்தோம். ஆனால் படம் வொர்க்-அவுட் ஆகவில்லை என்பது போன்ற விமர்சனங்களை முன் வைத்தனர். அதேபோல் படம் சிறப்பாக உள்ளது. இது போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

ப்ளூ சட்டை: பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சார் படத்தின் விமர்சனம் தொடர்பாக, " நம் சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழவேண்டும் என்றால் ஒரே வழி அனைவரும் கல்வி கற்பது மட்டும்தான். இப்படியான கல்வியை கற்கத் தடையாக கடவுளே வந்தாலும் அந்தக் கடவுளை போட்டுத் தள்ளிவிடவேண்டும் என்ற ஆழமான கருத்தைச் சொல்ல வந்த படம்தான் சார் படம். இந்தப் படத்தின் கதை, கட்டாயம் சொல்லப்படவேண்டிய கதைதான். ஆனால் மேக்கிங் ரசிக்கும்படியாக இல்லை" எனக் கூறியிருந்தார்.
வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு நாட்கள் ஆகின்றது. படம் தமிழ் நாடு முழுவதும் கணிசமான அளவிலான தியேட்டர்களிலேயே ரிலீஸ் ஆனதால் படத்தின் வசூலும் அதற்கேற்ற வகையில் உள்ளது. படம் முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 50 லட்சங்கள் வசூல் செய்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் இன்று வார விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்பதாலும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications











