காந்தாராவை இனி ஆங்கிலத்திலும் பார்க்கலாம் - நெட்ஃப்ளிக்ஸ் செய்த மாஸ் காரியம்
சென்னை: கடந்த வருடம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான காந்தாரா திரைப்படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காந்தாரா. பழங்குடி இன மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து கன்னடத்தில் மட்டும் முதலில் உருவான இந்தப் படமானது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

வசூலை வாரி குவித்த காந்தாரா
காந்தாரா திரைப்படமானது 16 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் சிறப்பாக இருந்ததால் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. கன்னட திரையுலகில் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக காந்தாரா கருதப்படுகிறது.

பிரபலங்களிடமிருந்து குவிந்த பாராட்டு
வசூல் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் மட்டுமல்லாமல் பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது காந்தாரா. படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநரும், ஹிரோவுமான ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினார்.
அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் காந்தாரா படத்தை பார்த்து தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

காந்தாராவின் இரண்டாம் பாகம்
காந்தாரா படம் 100 நாட்களை கடந்து ஓடியதை கொண்டாடும் நிகழ்வு சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய ரிஷப், காந்தாராவுக்கு பெரும் அன்பையும், ஆதரவையும் வழங்கிய பார்வையாளர்களால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நீங்கள் பார்த்தது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம்தான். இதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். காந்தாரா படத்தின் கதைக்கு வரலாற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால் காந்தாராவின் படப்பிடிப்பிலிருந்தபோது என் மனதில் யோசனை தோன்றியது. இன்னும் கதைக்கான பணி நடந்துகொண்டிருப்பதால் படத்தைப் பற்றிய விவரங்களை பின்னர் வெளியிடுகிறேன்" என்றார்.

காந்தாராவை ஆங்கிலத்தில் வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ஆங்கில மொழியில் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "தெய்வீகத்தால் மயங்கவும். ஆங்கில மொழியில் வெளியாவதால் காந்தாரா திரைப்படத்தின் தெய்வீக மணம் உலகளவில் பரவட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

காந்தாரா 2 பட்ஜெட் இவ்வளவா?
ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் சுமார் 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











