சினிமா ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட தேவாலய செட்.. அடித்து நொறுக்கிய இந்து அமைப்பு தலைவர் கைது!
கொச்சி: சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட தேவாலயம் செட்டை அடித்து நொறுக்கியதாக இந்து அமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழில், மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தவர், மலையாள நடிகர் டோவினோ தாமஸ். அதற்கு முன், அபியும் அனுவும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
மலையாளத்தில் கூதரா, என்னு நின்டே மொய்தீன், ஆமி, நாம், லூசிஃபர், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹாலிவுட் ஸ்டன்ட்
இவர் இப்போது 'மின்னல் முரளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது. பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் விளாட் ரிம்பர்க் இதில் பணியாற்றுகிறார்.

லாக்டவுன் காரணமாக
ஷான் ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சமீ தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக எர்ணாகுளம் அருகில் உள்ள கலடியில் ஆற்றின் ஓரத்தில் தேவாலய அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் தடைபட்டதால், அதற்கு பிறகு அங்கு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருந்தனர்.

தேவாலய அரங்கு
இந்நிலையில், சில இந்து அமைப்புகள் அந்த தேவாலய அரங்கை சரமாரியாக அடித்து உடைத்தனர். அந்த செட்டை உடைக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி பலோட், இந்த செட், ஆதி சங்கராச்சாரியா மடத்துக்கு அருகில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் உடைத்தோம் என்று கூறி இருந்தார்.

அனுமதி பெற்றுதான்
ஆனால், அனுமதி பெற்றுதான் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் தெரிவித்தார். இந்த பிரச்னை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனியார் சொத்துக்களை மதிக்காத இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.

பஜ்ரங்தள் தலைவர்
இந்நிலையில் இந்த செட்டை அடித்து நொறுக்கியதாக, காரா ரத்தீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் சமூக விரோத செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. இவர் எர்ணாகுளம் பகுதி ராஷ்ட்ரிய பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

தீவிர சிகிச்சை
கல என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட டோவினோ தாமஸ், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











