2 நிமிட நூடுல்ஸ் போல இனி கதைகளை பார்க்கலாம்.. கரண் தயாநிதி மாறனின் கதை ஷார்ட்ஸ் செயலி அறிமுகம்!
சென்னை: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் முதல் ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளமாக 'கதை ஷார்ட்ஸ்' (KadhaiShorts) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரண் தயாநிதி மாறன், மே 28, 2026 அன்று இந்த தளத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் அவர் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
மொபைல் பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'குட்டி சீரிஸ்'களை கதைஷார்ட்ஸ் வழங்குகிறது. இவை தலா இரண்டு நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சினிமா தரத்திலான மைக்ரோ-டிராமா எபிசோடுகளாகும். சிறந்த தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான இந்தக் கதைகள், பொழுதுபோக்கிற்கான புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகின்றன.

பயனர்கள் இத்தகைய மைக்ரோ-டிராமாக்களை 'கதைஷார்ட்ஸ்' செயலி மூலம் வெறும் ₹20 செலுத்தி அணுகி கண்டு களிக்கலாம். இந்த புதிய முயற்சி, ஆரம்பத்தில் தமிழ் மொழி உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். இதன் மூலம் தமிழ் பார்வையாளர்களுக்கான தனித்துவமான கதைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்தில், கதைஷார்ட்ஸ் தனது சேவைகளை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில், அந்தந்த நிலத்தின் கலாச்சார இயல்புடன் கூடிய ஒரிஜினல் படைப்புகள் உருவாக்கப்படும். உள்ளூர் வட்டார வழக்குகளையும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும் மையமாகக் கொண்டு பொழுதுபோக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதே இதன் நோக்கமாகும்.
கதை ஷார்ட்ஸ் தனது முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட முற்றிலும் ஒரிஜினல் மைக்ரோ-டிராமாக்களைத் தயாரித்து வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொலைநோக்குத் திட்டம் குறித்துப் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், "பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு பிரத்யேக மைக்ரோ-டிராமா தளத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கதைஷார்ட்ஸ் இந்தத் துறையில் நிச்சயம் முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," எனக் குறிப்பிட்டார்.
கதை ஷார்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், "சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்," என்று தெரிவித்தார்.
இந்தத் துறையின் அடுத்த தலைமுறை திறமைகளை வளர்க்கும் முயற்சியாக, 'கதை கிளப்' என்ற புதிய முன்முயற்சியையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கிளப், புதிய தலைமுறை கதையாடல்களுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கல் உள்ளடக்க உருவாக்கத்திற்கான பிரத்தியேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
ஏற்கனவே 12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள 'கதை கிளப்', பல்வேறு படைப்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல திறன் படைத்தவர்களுக்கு மைக்ரோ-டிராமா சூழலியலில் பங்கேற்கக் கதைகிளப் ஒரு பாலமாகச் செயல்படுகிறது.
2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதை ஷார்ட்ஸின் முக்கிய இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டகிரேஷன் மாடல்களை இத்தளம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுக்கான புதிய வழிகளை வழங்க கதைஷார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications