இது அநியாயம்.. கரண் ஜோஹர் மீது எழுந்த குற்றச்சாட்டு.. சப்போர்ட்டுக்கு வந்த சர்ச்சை இயக்குநர்!
ஹைதராபாத்: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதற்கு கரண் ஜோஹர் தான் காரணம் என சொல்வது முட்டாள்த்தனமானது என ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
Recommended Video
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு அரசியல் தான் காரணம் என நெட்டிசன்கள் நேற்று பல ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலைக்கு நடிகர் சல்மான் கான் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்து வருகின்றனர்.

மரணத்தில் குழப்பம்
பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது நாடு முழுவதும் அவர் பற்றிய பேச்சுக்களாகவும், அந்த தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் அதற்கு பாலிவுட்டின் நெபோடிஸம் தான் காரணம் என்றும் ஆளுக்கொரு கொடியை பிடித்துத் தொங்கி வருகின்றனர்.

டிவீட்டால் சிக்கிய கரண் ஜோஹர்
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண செய்தியை அறிந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், "உனது மரணத்திற்கு நானும் ஒரு காரணம் ஆகிவிட்டேனே, சில ஆண்டுகளாக உன்னை நான் சந்திக்காமல் விட்டது, நான் செய்த பிழை" என்கிற டிவிட்டை போட்டு சுஷாந்த் சிங் மரணத்திற்காக உருகி இருந்தார். அதனை தொடர்ந்து, நீங்கள் தான் அவரை கொன்று விட்டீர்கள் என பாலிவுட் ரசிகர்கள் அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சர்ச்சை இயக்குநர்
டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா, நேற்று இரவு, நெட்டிசன்களை கடுமையாக விமர்சித்து, கரண் ஜோஹருக்கு ஆதரவாக பல டிவீட்டுகளை பதிவிட்டுள்ளார். கரண் ஜோஹர் தான் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என பிதற்றுவது முட்டாள்த்தனமான ஒன்று என்றும் விளாசி உள்ளார்.

அது அவர் இஷ்டம்
தனது படத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம், நடிக்க வைக்கக் கூடாது என்ற முடிவை எடுக்கும் உரிமை எல்லா இயக்குநர்களுக்கும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இருக்கு, அதை மட்டுமே வைத்துக் கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு கரண் ஜோஹரையோ பிறரையோ குறை சொல்வது அறிவற்ற செயல் என பதிவிட்டுள்ளார்.

தினமும் தூக்குப் போட்டுக்கணும்
சினிமாவுக்கு வந்து சாதனை நாயகனாக 12 ஆண்டுகள் ஆன ஒரு நடிகரை வாரிசு அரசியல் கொன்று விட்டதாக சொல்வதை தன்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், கோடிக் கணக்கில் சம்பாதித்து வைத்த ஒருத்தர், வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தூக்குப் போட்டுக் கொண்டார் என்றால், வாய்ப்பு கிடைக்காமல் தினமும் அலைந்து திரியும் நூற்றுக்கணக்கான நடிகர்கள் தூக்குப் போட்டுக் கொள்ளும் நிலை எப்பவோ உருவாகி இருக்கும் என்றும் விளாசியுள்ளார்.

அவருக்கும் ஒரு மகன் பிறந்தால்
அமிதாப் பச்சன் முதல் கரண் ஜோஹர் வரை சாதாரண மனிதர்களாக இருந்து தான் பாலிவுட் பிரபலங்களாக மாறினர். அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனை நடிக்க வைத்தது போல, சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் ஒரு மகன் பிறந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் அவரும் நடிகராக மாறியிருக்கலாம் என்றும் நெபோடிஸம் ஒன்றும் தவறு இல்லை என்றும் ராம் கோபால் வர்மா நெட்டிசன்களை வெளுத்து வாங்கி உள்ளார்.

மற்றவர்கள் மனைவியை
நெபோடிஸம் எனும் உறவு நிச்சயம் சினிமாவில் தேவை. அது ஒரு குடும்பமாக பிறரையும் பார்க்க உதவும். என்னதான் தனது பிள்ளைகளையும், உறவினர்களையும் சினிமாவில் களமிறக்கினாலும், திறமை இருந்தால் தான் அவர்களால் சாதிக்க முடியும். சமூகத்தின் கட்டமைப்புக்கு அடிப்படையாக இந்த நெபோடிஸம் இருக்கிறது என்றும், நீங்க உங்கள் மனைவியை விடுத்து மற்றவர்கள் மனைவியை காதலிக்க முடியாது என்றும், அதே போலத்தான் உங்கள் குழந்தைகளை தான் அதிகம் நேசிப்பீர்கள், பல போராட்டங்களுக்கு பிறகு முன்னுக்கு வந்த பாலிவுட் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை களமிறக்குவது தவறான செயல் அல்ல என்றும் வாதிட்டுள்ளார்.

மனிதனே இல்லை
சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அடுக்கடுக்கான டிவீட்களை பார்த்து மேலும், கடுப்பான நெட்டிசன்கள், நீங்கள் மனிதனே இல்லை என்றும், உங்களுக்குள் கொஞ்சமும் ஈரம் இல்லை என்றும், பாலிவுட் பிரபலங்களுக்கும் அவங்க குழந்தைகளுக்கும் சிங் சாங் நல்லா போடுறீங்க, திறமை தான் நடிகனை தேர்வு செய்ய வேண்டும். வாரிசு அரசியல் சமூக கட்டமைப்பின் தீவிர வியாதி என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











