தனுஷ் குரலில் வெளியானது கர்ணன் படத்தின் 3வது பாடல்.. எப்படி இருக்கு ‘தட்டான் தட்டான்’ பாட்டு?
சென்னை: தனுஷின் கர்ணன் படத்தின் மூன்றாவது பாடலான 'தட்டான் தட்டான்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
திரெளபதையின் முத்தம் என்கிற அறிவிப்புடன் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாடலில் எங்குமே அந்த பெயர் இடம் பெறவே இல்லை.
மாறாக அருமையான மண் வாசம் நிறைந்த பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

தட்டான் தட்டான்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் மூன்றாவது பாடலான தட்டான் தட்டான் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. திரெளபதையின் முத்தம் என்கிற அறிவிப்போடு இந்த பாடல் இன்று வெளியாகும் என நடிகர் தனுஷ் நேற்று ட்வீட் போட்டிருந்தார்.

மாமன் கர்ணன்
ஆனால், தட்டான் தட்டான் பாடலில் எங்கேயும் திரெளபதை என்கிற வார்த்தையே இல்லை. படத்தின் நாயகிக்கு இயக்குநர் திரெளபதை என பெயர் வைத்திருக்கிறாரா? என்பது படம் வெளியானால் தான் தெரியும். பாடல் தொடங்குவதற்கு முன்னதாக இடம்பெற்றுள்ள வரிகளில் மாமன் கர்ணனை தேடி மலை உச்சி ஏறினாள் திரெளபதை எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

தனுஷ் குரலில்
சந்தோஷ் நாராயணன் இசையில், யுகபாரதி வரிகளில் உருவாகி உள்ள இந்த தட்டான் தட்டான் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தனுஷ் பாடும் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வைரலாகி வருகிறது. தனுஷின் தரிசனத்தை கண்ட ரசிகர்கள் படம் பெரிய வெற்றி பெறும் என வாழ்த்தி வருகின்றனர்.
பாடல் எப்படி இருக்கு?
தமிழ் சொற்கள் நிறைந்து கிராமத்து மண் வாசனை, மழை வாசனையுடன் பாடல் இளையராஜா சாயலில் இடம்பெற்றுள்ளது. நாயகி ரஜிஷா விஜயனின் காட்சிகள், ஏர் உழுவும் காட்சிகளும் அதற்கேற்ற வரிகளும் பாடலை கேட்ட உடனே ரசிகர்களுக்கு பிடிக்க வைத்து விடுகிறது. ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











