CCL 2026: கடைசி வரை போராடிய சென்னை கிங்ஸ்.. த்ரில் வெற்றியுடன் ஃபைனல் சென்ற கர்நாடகா புல்டோசர்ஸ்!
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி சென்னை கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இந்த வெற்றியின் மூலம் கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த சென்னை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. நடிகர் விக்ராந்த் சந்தோஷ் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும், கர்நாடகாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வேல்ஸ் சென்னை அணி தடுமாறியது.

விக்ராந்த் சந்தோஷ் 24 பந்துகளில் அதிரடியாக 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்குத் துணையாக, ஆதவ் கண்ணதாசன் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். எனினும், அவர்களது பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. ஓப்பனர் ரமணா அமர் (2) டார்லிங் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் பறிபோனார்.
சாந்தனு பாக்யராஜ் 4 பந்துகளில் 5 ரன்களுடன் வெளியேற, அடுத்து வந்த பிருத்வி பாண்டியராஜன் மற்றும் சத்யா இருவரும் சச்சினின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி டக் அவுட் ஆகினர். இதனால் சென்னை கிங்ஸ் அணி பெரும் சரிவை சந்தித்தது.
ஷரன் குமார் 11 பந்துகளில் 9 ரன்களும், அசோக் செல்வன் 16 பந்துகளில் 12 ரன்களும், தசராதி 10 பந்துகளில் 12 ரன்களும், பாரி இளவழகன் 9 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தனர். நடிகர் பரத் 2 பந்துகளில் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். மொத்தம் 13 எக்ஸ்ட்ரா ரன்கள் (ஒரு பை, 2 லெக் பை, 9 வைடு, 1 நோ-பால்) சென்னை அணிக்கு கிடைத்தன.
கர்நாடகா புல்டோசர்ஸ் அணியின் பந்துவீச்சு சென்னை கிங்ஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது. சண்டன் கே - விக்ராந்த் மற்றும் சாந்தனு விக்கெட்டுகளை எடுத்தார். சச்சின் - பிருத்வி, ஷரன் மற்றும் சத்யா ஆகியோரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். கரண் ஏ - அசோக் செல்வன், தசராதி ஆகிய இருவரையும் வெளியேற்றி, ஆதவ்வை ரன் அவுட் செய்தார். டார்லிங் கிருஷ்ணா ஜி - ரமணா விக்கெட்டையும், பிரதாப் கே - பாரி விக்கெட்டையும் கைப்பற்றினர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பரபரப்பான ஆட்டத்தில், 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்து, ஒரு பந்து மீதமிருக்க வெற்றியைக் கைப்பற்றியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், agresive batting தொடர்ந்தது.
கர்நாடகா புல்டோசர்ஸ் வெற்றிக்கு கத்திக் ஜெயராம் அடித்த அரை சதம் சாதகமாக மாறியது. அவர் 44 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். டார்லிங் கிருஷ்ணா கணேஷ் 20 ரன்களும், நிரூப் பண்டாரி 25 ரன்களும், கரண் ஆர்யன் 23 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
மஞ்சுநாத் கவுடா 14 ரன்கள் சேர்க்க, கேப்டன் கிச்சா சுதீப் 13 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்து தோனி போல கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஃபினிஷிங் செய்தார். பிரதாப் குரி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். சண்டன் குமார் டக் அவுட் ஆனார். கர்நாடகா அணிக்கு 9 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தன.
சென்னை கிங்ஸ் பந்துவீச்சாளர்களில் பாரி சிறப்பாக செயல்பட்டு டார்லிங் கிருஷ்ணா கணேஷ், ராஜீவ் ஹானு மற்றும் கரண் ஆர்யன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆதவ் கே, சண்டன் குமாரை டக் அவுட்டாக்கினார், மேலும் அரைசதம் அடித்த கத்திக் ஜெயராமின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
அசோக் எஸ், கரண் ஆர்யனையும், விக்ராந்த் எஸ் மஞ்சுநாத் கவுடா விக்கெட்டையும் வீழ்த்தி கர்நாடகா ரன் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றனர். விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்த நிலையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி இறுதியில் வெற்றி வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலம் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2026-ன் இறுதிப் போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி பெங்கால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிப்ரவரி 1, 2026 (இன்று) நடைபெற உள்ளது. சிசிஎல் 2026 வெற்றிக் கோப்பையை கிச்சா சுதீப்பின் கர்நாடகா புல்டோசர்ஸ் தட்டித் தூக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











