CCL 2026: டோலிவுட்டை ஓட விட்ட சாண்டில்வுட்.. என்னங்க மாறி மாறி செஞ்சுரி எல்லாம் அடிக்கறாங்க!
கோவை: செலபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2026 தொடரில், கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டிய புல்டோசர்ஸ், இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
போட்டியில், டாஸ் வென்ற கர்நாடகா புல்டோசர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெலுங்கு வாரியர்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. ஓப்பனர் அஷ்வின் பாபு 132 ரன்கள் (69 பந்துகள், 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்து அசத்தினார். அகில் அக்கினேனி 44 ரன்கள் (35 பந்துகள்) எடுத்து எல்.பி.டபிள்யூ ஆனார். அஷ்வின் மற்றும் அகில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.
அஷ்வின், பிரின்சுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு மேலும் 87 ரன்கள் குவிக்க, பிரின்ஸ், தமன், சாம்ராட் போன்ற அடுத்த வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தெலுங்கு வாரியர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கர்நாடகா பந்துவீச்சாளர்களில் பிரதீப் போகாடி, சந்தன் குமார், கரண் ஆர்யன், அருண் பச்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

வலுவான தொடக்கம்: 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, பிரதீப் மற்றும் ராஜீவ் ஹனுவின் அதிரடி ஆட்டத்தால் வலுவான தொடக்கம் கண்டது. முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த பிரதீப் 64 ரன்களில் (33 பந்துகள், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) அகில் பிடித்த கேட்ச்சில் வினய் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடி ஆட்டம்: பின்னர் ராஜீவ் ஹனுவுடன் இணைந்த டார்லிங் கிருஷ்ணா எளிதாக இலக்கை எட்டினர். ராஜீவ் 107 ரன்கள் (53 பந்துகள், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) மற்றும் டார்லிங் கிருஷ்ணா 43 ரன்கள் (20 பந்துகள், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜீவ் ஹனு தனது அசத்தலான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
வெற்றி: கர்நாடகா அணி 227 ரன்கள் இலக்கை, இன்னும் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில், எந்தத் தடுமாற்றமும் இன்றி எட்டியது. தொடரில் 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 3 போட்டிகளில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று தெலுங்கு வாரியர்ஸ் 5வது இடத்திலும் உள்ளன. இன்று அதாவது ஜனவரி 24ஆம் தேதி கோலிவுட் அணியான வேல்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேரளா ஸ்டைகர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications











