ஆமாம் கங்குவாவில் அவர் நடிக்கிறார்.. சஸ்பென்ஸை பட்டென போட்டு உடைத்த பிரபலம்
சென்னை: சூர்யா இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் திஷா பதானி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லரும், பாடலும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தில் பணியாற்றியிருக்கும் பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது படத்தில் இருக்கும் பெரும் சஸ்பென்ஸை உடைத்துவிட்டார் அவர்.
கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

பெரும் பட்ஜெட்: இந்தப் படமானது மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியிருக்கிறது. சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மொழிகளில் வெளியாகவிருப்பதால் சூர்யாவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு சூர்யாவின் ரசிகர்களிடம் இருக்கிறது.
பட்டையை கிளப்பிய அப்டேட்டுகள்: படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்தது. இந்தப் படமானது பீரியன் ஜானர் மற்றும் இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி என இரண்டு டைப்புகளிலும் உருவாகியிருக்கிறதாம். படத்தின் போஸ்டர்கள் முதலில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பிறகு படத்தின் ட்ரெய்லர், சிங்கிள் பாடல் வெளியாகி மேற்கொண்டு ஹைப்பை ஏற்றியிருக்கிறது. சூர்யாவின் நடிப்பும், சிவாவின் மேக்கிங்கும் தரமாக இருந்தது என்று ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.
அக்டோபரில் ரிலீஸ்: படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதாவது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த்தின் வேட்டையன் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. மேலும் வேட்டையனுடன் மோதுவது ரிஸ்க்தான் என்று ஞானவேல் ராஜாவும் சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருந்தார். எனவே வேட்டையனுக்கு போட்டியாக கங்குவா வருமா இல்லை வேட்டையன் ரிலீஸுக்கு பிறகு சில நாட்கள் கழித்து வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
விவேகா பேட்டி: இதற்கிடையே இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது என்றும்; முதல் பாகத்தில் கார்த்தி நடித்திருக்கிறார்; அவரது கேரக்டர்தான் இரண்டாவது பாகத்துக்கு லீட் கொடுக்கும்படி அமைந்திருக்கும் என்றும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அவரிடம் இதுகுறித்து தொகுப்பாளர் கேட்டதற்கு, ஆம் கார்த்தி நடித்திருப்பது உண்மைதான் என்றார். இதன்மூலம் கங்குவாவில் கார்த்தி நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











