மெட்ராஸ் ரிலீஸ் எப்போ? கார்த்தி அறிவிப்பு
கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் திரைப்படம் செப்டம்பர் 26ல் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் கார்த்தி. ஆயிரத்தின் ஒருவன், பையா போன்ற படங்களில் நடித்தார். நான் மகான் அல்ல அவரின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தியது.
திருமணத்திற்குப் பின்னர் அவர் நடித்த சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி போன்ற படங்கள் கார்த்திக்கு தோல்வி படங்களாகவே அமைந்து விட்டன.

எதிர்பார்ப்பில் மெட்ராஸ்
அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் கார்த்தி இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

வெளியிட தயக்கம்
எனினும் மெட்ராஸ் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினர். தியேட்டர்காரர்களிடமிருந்தும் மெட்ராஸ் படத்துக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை.

வரவேற்பு போதலையே
அப்படியும் சூழ்நிலை மெட்ராஸ் படத்துக்கு பாசிட்டிவ்வாக இல்லை என்பதை புரிந்து கொண்ட மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார்.

புது விநியோக நிறுவனம்
அதாவது, சி.வி.குமார், எல்ரெட் குமார் போன்ற சில தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி போட்டு ட்ரீம் ஃபேக்டரி என்ற பெயரில் புதிய விநியோக கம்பெனியையே தொடங்கிவிட்டார்.
மெட்ராஸ் படத்தை இந்த ட்ரீம் ஃபேக்டரி கம்பெனிதான் வெளியிட இருக்கிறது.

தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
மெட்ராஸ் படத்தை வெளியிட விநியோக கம்பெனியை தொடங்கிவிட்டாலும், படத்தை திரையிட தியேட்டர்கள் வேண்டும் அல்லவா? கார்த்தி படம் என்பதால் தியேட்டர்காரர்கள் யாரும் தியேட்டர் தர முன்வரவில்லை, தவிர வாரம் வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்ததால் மெட்ராஸ் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.

செப்டம்பர் 26ல் ரிலீஸ்
இந்தப் பிரச்சனை காரணமாக மெட்ராஸ் படம் காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் ரிலீஸ் ஆகாமலே கிடந்தது. இந்நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு வருகிற 26-ஆம் தேதி மெட்ராஸ் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா. இதனை நடிகர் கார்த்தியும் உறுதி படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications