Karthi - மனோபாலா அப்படிப்பட்டவர்.. அவர் இழப்பு பேரிழப்பு - கார்த்தி உருக்கம்
சென்னை: Karthi (கார்த்தி) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மனோபாலாவுக்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் நடிகர் கார்த்தி உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.
பிலிமாலயா என்ற பத்திரிகையில் பணியாற்றியவர் பாலசந்தர். அதன் பிறகு சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்த பிறகு ஏற்கனவே ஒரு பாலசந்தர் இருந்ததால் தனது பெயரை மனோபாலா என மாற்றிக்கொண்டார். கமல் ஹாசனின் பழக்கம் கிடைக்க அவருடைய பரிந்துரையின் பெயரிலும், மனோபாலாவின் திறமையின் அடிப்படையிலும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அதன் பிறகு பாரதிராஜாவின் ஆஸ்தான சீடர்களில் ஒருவராக மாறினார்.

இயக்கம் மனோபாலா: புதிய வார்ப்புகள், டிக் டிக் டிக் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாரதிராஜாவிட்ம் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநரா அடி எடுத்து வைத்தார். அதனையடுத்து ரஜினி, விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட ஸ்டார்களின் படங்களை இயக்கி முக்கியமான இயக்குநராக மாறினார். பாட்ஷா படத்தை மனோபாலாதான் முதலில் இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈகோவா அப்படினா என்ன?: 2002ஆம் ஆண்டு கடைசியாக நைனா படத்தை இயக்கிவிட்டு படம் இயக்குவதை நிறுத்தினார். தொடர்ந்து சீரியல்களை இயக்கிய அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளராகவும் மூன்று படங்களை தயாரித்த மனோபாலா தற்போது உருவாகிவரும் லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். யாரிடமும் ஈகோ பார்க்காமல் மனோபாலா சினிமா சங்கங்கள் மட்டுமின்றி சின்னத்திரை சங்கங்களிலும் பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு அப்போலோவில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனையடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்தனர். பாரதிராஜா, இளையராஜா என பல பிரபலங்கள் கொஞ்சம் எமோஷனலாகவே இருந்தனர்.
மனோபாலா நினைவேந்தல்: இந்நிலையில் மனோபாலாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மனோபாலாவுக்கு மட்டுமின்றி டி.பி. கஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்டோருக்குமான நினைவேந்தல் நிகழ்வாக அது நடைபெற்றது. இதில் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கார்த்தி உருக்கம்: நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, "எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் முன் நின்று பொறுப்பை எடுத்து செய்பவர் மனோபாலா. ஈகோ இல்லாத அவர் அனைவரிடமும் சாதாரணமாக உண்மையாக பழகக்கூடியவர். அதேபோல் கஜேந்திரன் மிகப்பெரிய ஆளுமை. மயில்சாமியை சிறுத்தை படத்திலிருந்து தெரியும். தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்பார்கள். மயில்சாமியோ தானத்துக்கு மிஞ்சியதுதான் தனக்கு என வாழ்ந்தவர். எம்ஜிஆர் போலவே உதவும் குணம். இவர்கள் மூன்று பேரின் இறப்பு பேரிழப்பு" என்றார்.


Click it and Unblock the Notifications











