Karthi: “கார்த்திக்கு மரியாதை தெரியல... அமீர் இல்லன்னா அவரு இல்ல..” பருத்திவீரன் பிரபலம் பளார்!
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கு நாளுக்கு நாள் ஆதரவுக் கூடிக்கொண்டே இருக்கிறது. ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்தும் இந்த பிரச்சினைக்கு முடிவு வரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்துத் தெரிவிக்காமல் இருக்கும் கார்த்தியை பருத்திவீரன் பிரபலம் விளாசியுள்ளார்.

அமீர் இல்லன்னா கார்த்தியே கிடையாது
அமீரின் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் கல்ட் கிளாசிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இப்போது வரை அவருக்கு பருத்திவீரன் தான் பெரிய அடையாளமாக இருக்கிறது.
இந்நிலையில், பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்கள் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ஆனால், இதுவரை கார்த்தி இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்.
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அமீரை அழைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன்பின்ன்ரே பருத்திவீரன் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அமீரும் ஞானவேல்ராஜாவும் அடுத்தடுத்து பேட்டிக் கொடுக்க, இப்போது கோலிவுட்டே பற்றி எரிகிறது. பருத்திவீரன் பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில் அமீரின் ராம், பருத்திவீரன் படங்களில் நடித்திருந்த கஞ்சா கருப்பும் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், சூர்யா, கார்த்தி என சிவகுமார் குடும்பமே அமீரை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், ஞானவேல்ராஜா, சூர்யா ஆகியோர் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டதாகவும், அமீர் தான் கடன் வாங்கி ஷூட்டிங் நடத்தியதாகவும் பல உண்மைகளை வெளியிட்டார்.
மேலும், கல்லூரி நிகழ்ச்சி, சினிமா ப்ரமோஷன் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் 'என்ன மாமா சௌக்யமா?' எனும் வசனத்துடன்தான் தோரணையாக பேச ஆரம்பிக்கிறார் கார்த்தி. இந்த உடல்மொழியும் பிரபலமான வசனத்தையும் சொல்லித்தந்தது அமீர் அண்ணன்தானே?. இனி இதை பேசாமல் மேடையில் ஏறும் தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலா இல்லையென்றால் சூர்யா கிடையாது. அதேபோல், அமீர் இல்லையென்றால் கார்த்தி கிடையாது. ஆனால், அந்த மரியாதை கூட இல்லாமல் கார்த்தி இருப்பது சரி இல்லை எனவும் விமர்சித்துள்ளார். முதல் படத்திலேயே இப்படியொரு சூப்பர் ஹிட் கொடுத்த அமீர் தான் கார்த்திக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். இதனை கார்த்தியும் அவரது குடும்பமும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கஞ்சா கருப்பு குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











