கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் தேதி இதுவா?.. தள்ளிப்போனது ஒருவகையில் நல்லதுதானோ?.. இப்போதாவது வருமா?
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் வா வாத்தியார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. பல பிரச்னைகளை கடந்து டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யாவின் தம்பியான கார்த்தி தனது முதல் படமான பருத்தி வீரனில் இருந்தே கதைகளை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருக்கிறார். அவர் ஏற்கனவே மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியதால் கூடுதல் அனுபவம் கதை தேர்வில் அவருக்கு இருக்கிறது. அறிமுகமான சமயத்தில் வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவர்; இடையில் சறுக்கினார். பிறகு மீண்டும் மெல்ல மெல்ல எழுந்த அவர் ஜப்பானில் விழுந்தார். அதுமட்டுமின்றி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட மெய்யழகன் படம் சுமாராக ஓடியதும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும்.
நலன் குமாரசாமியுடன் கூட்டணி: இதற்கிடையே சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த நலன் குமாரசாமியுடன் கூட்டணி அமைத்தார் கார்த்தி. படத்துக்கு வா வாத்தியார் என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார்கள். நலன் இயக்கத்திற்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

தொடர்ந்து தாமதம்: படத்தின் பணிகள் எப்போதோ முடிந்துவிட்டன. ஆனால் ரிலீஸாவதில் தொடர்ந்து தாமதமாகிவருகிறது. அதாவது இப்படத்தை தயாரித்திருக்கும் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி தராததால்; கடன் கொடுத்தவர் நீதிமன்றத்துக்கு செல்ல; படம் ரிலீஸாவதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட். ஒருவழியாக அனைத்தும் முடிந்து படம் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தது.
சூடுபிடித்த ப்ரோமோஷன்: இதனால் ரொம்பவே மகிழ்ச்சியடைந்த படக்குழு ப்ரோமோஷன் பணிகளை மும்முரமாக தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்கூட நடந்தது. அப்போது பேசிய விநியோகஸ்தர் ஒருவர், இந்தப் படத்துக்காக ஞானவேல் ராஜா பிரச்னையில் சிக்கியிருந்தபோது சூர்யாதான் அனைத்துக்கும் முடிவு வரும்படி ஒரு உதவி செய்தார் என்றெல்லாம் புகழ்ந்தார். ஆனால் திடீரென டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்தும் ரிலீஸ் தள்ளிப்போனது.
எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் வா வாத்தியார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி எம்ஜிஆரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக கார்த்தி நடித்திருப்பதால்; அன்றைய நாளில் ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications