Vaa Vaathiyaar Box Office Day 1: வா வாத்தியார் பாக்ஸ் ஆபீஸ்.. முதல் நாளே நின்னு அடிச்சாரா கார்த்தி?
சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் வா வாத்தியார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை கடந்த ஆண்டே ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில பல காரணங்களாலும் நீதிமன்ற உத்தரவினாலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் படத்தை நேற்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் ரேஸில் களமிறக்கி உள்ளனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து காணலாம்.
தமிழ் சினிமாவில் டார்க் காமெடி என்றாலே அது நலன் குமாரசாமி தான் என்று கூறும் அளவுக்கு டார்க் காமெடி படங்களை கொடுத்துள்ளார் நலன். இப்படி இருக்கையில் நலன் குமாரசாமி இயக்கத்தில், அதுவும் கார்த்தி இணைந்து நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் சிறுத்தை படத்தைப் போல நல்ல காமெடி எண்டர்டெயினர் படம் உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இப்படி இருக்கையில் படத்தை எப்போதுதான் ரிலீஸ் செய்வார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்க, ஒருவழியாக படத்தை ரிலீஸ் செய்தது படக்குழு.

படத்தின் ஒன் லைன் என்றால் அது, தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர் தனது பேரனை, எம்.ஜி.ஆர் திரையில் என்னவெல்லாம் போதித்தாரோ அவற்றை எல்லாம் சொல்லி வளர்க்கிறார். ஆனால் பேரனுக்கோ தாத்தாவின் டார்ச்சரால் எம்.ஜி.ஆர் மீது வெறுப்பும், வில்லன் நம்பியார் மீது ஈர்ப்பும் ஏற்படுகிறது. இதனால் நம்பியாரை போல வில்லாதி வில்லனாக யோசிக்கிறார், செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையில் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, நம்பியார் பாணி சரியில்லை நமக்கு வாத்தியார் பாணி தான் சரி என்று வா வாத்தியாராக படம் மாறுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.
படம் எப்படி இருக்கு?: நலன் குமாரசாமி என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, காமெடிக்கு பஞ்சம் இருந்தால் அது நலன் குமாரசாமியின் படமாகவே இருக்காது என்று கூறும் அளவுக்கு தனது திரைக்கதை அமைப்பிலேயே காமெடியை அழகாக உள்ளீடு செய்து ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருப்பார். அவரது படம் என்றால் சொல்லவா வேண்டும் என்று கூறும் அளவுக்கு காமெடியில் ரசிகர்கள் மனதை வென்று விட்டார். காமெடி காட்சிகள் என்றால் 100க்கு 108 மார்க் வாங்குவார் கார்த்தி, அவருக்கு இந்த படமும் அவரது கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்தி போய்விட்டது என்ற பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வசூல் விபரம்: இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.5 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. உலக அளவில் சுமார் ரூபாய் 5 முதல் ரூபாய் 5.5 கோடிகள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கார்த்தியின் அண்மைக்கால படங்களில் முதல் கலெக்ஷன் மிகக் குறைந்த அளவுக்கு இருந்தது இந்த படம் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், வரும் காலங்களில் படத்திற்கு நல்ல கலெக்ஷன் கிடைக்கும் என்று படக்குழு நம்புகிறது.


Click it and Unblock the Notifications











