விஜய் சேதுபதிக்கு பதிலாக கார்த்தி, சமந்தா... 96 இயக்குநரின் அடுத்த காதல் கவிதை..?
சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
2018ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதிபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது அதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக கார்த்தி, சமந்தா இருவரும் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ராம் - ஜானுவின் காதல் கவிதை
2018ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் கோலிவுட்டில் புதிய அதிர்வலைகளை கொடுத்தது. பூவே உனக்காக, காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, ஆட்டோகிராப் படங்கள் போல, அனைத்து தரப்பு ரசிகர்களையும் உருக வைக்கும் ஒன்றாக வெளியானது 96. எப்போதுமே ரஃப் அன்ட் டஃப்பாக கெத்து காட்டி வந்த விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ராம் என்ற கேரக்டரில் சிலிர்க்க வைத்தார். இவருக்கு ஜோடியாக ஜானு என்ற கேரக்டரில் நடித்த த்ரிஷா, இந்தப் படம் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்தார்.

மீண்டும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி
முக்கியமாக இந்தப் படத்தில் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களை உருக வைத்தன. அதேநேரம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த 96, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து 96 கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளியாகின. அது 96 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

விஜய் சேதுபதிக்கு பதில் கார்த்தி?
விஜய் சேதுபதி - இயக்குநர் பிரேம் குமார் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவே இல்லை. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக தான் விஜய் சேதுபதி விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக கார்த்தி இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக சமந்தா..?
ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2-வில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து சர்தார் 2 உட்பட மேலும் சில படங்கள் கார்த்தியின் கைவசம் உள்ளன. இதனிடையே பிரேம் குமார் இயக்கத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து கார்த்தி, பிரேம் குமார் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

2டி தயாரிப்பில் பிரேம்குமார்
அதேபோல், பிரேம்குமார், கார்த்தி, சமந்தா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா கெமிஸ்ட்ரியில் ஹிட் அடித்த 96 படம் போல, இதுவும் காதல் பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கார்த்தி - சமந்தா கெமிஸ்ட்ரியை பார்க்க இப்போதே ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். முன்னதாக பேச்சுலர் பட இயக்குநர் சதீஷ் செல்வகுமாரின் புதிய படத்தில் கார்த்தி - சமந்தா ஜோடி இணைவதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











