மூன்று மடங்கு லாபம்.. 100 கோடி கிளப்பில் இணைந்த கைதி!
Recommended Video
சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய்யின் பிரம்மாண்டமான பிகில் படத்துக்கு போட்டியாக கடந்த அக்டோபர் 25ம் தேதி கைதி படம் வெளியானது.
கைதி படம் வெளியாகி 15 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் 110 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறை
கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற படங்கள். ஆனால், இதுவரை கார்த்தியின் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்தது கிடையாது. கைதி படத்தின் மூலம் முதல் முறையாக 100 கோடி கிளப்பில் கார்த்தி இணைந்துள்ளார்.

பாசம் தான் காரணம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா, மாளவிகா அவினாஷ், பேபி மோனிகா, ஜார்ஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் கைதி படத்தில் நடித்திருந்தனர். பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அற்புதமான திரைக்கதை வடிவமைப்பால் கைதி படம் சீட் எட்ஜ் த்ரில்லராக இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் விட, படத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை - மகள் பாசம் தான் படத்தை அனைத்து சென்டர்களிலும் ஹிட் அடிக்க வைத்துள்ளது.

மூன்று மடங்கு லாபம்
கார்த்தியின் கைதி படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கைதி படம், உலகளவில் செய்த வசூல், டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் டிவி ரைட்ஸ் என மொத்தம் 110 கோடியை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து
கைதி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த மாதம் ஜீத்து ஜோசப்பின் ‘தம்பி' படத்தின் மூலம் கார்த்தி மீண்டும் ரசிகர்களை குஷி படுத்த வரவுள்ளார். மேலும், ஜனவரியில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்து வரும் சுல்தான் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











