தொடர் ஹவுஸ்ஃபுல்.. 100 கோடி கிளப்பை நெருங்கும் கைதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் 12 நாட்களில் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.

தீபாவளி வின்னர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்துள்ளன. பிகில் திரைப்படம் 260 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், கைதி திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விமர்சன ரீதியில் பார்த்தால், பிகில் படத்தை கைதி படம் ஓவர் டேக் செய்து, இந்த தீபாவளியின் ரியல் வின்னராக திகழ்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

எதிர்பார்ப்பு
ஒரே இரவில் நடந்து முடியும் கைதி திரைப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து போயுள்ளது. அதனால், கைதி 2ம் பாகத்திற்கு அதிகளவில் மக்கள் எதிர்பார்க்கின்றனர். கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும், கைதி 2 படம் வரும் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால், இருவரும் படு பிசியாக இருப்பதால், கைதி 2 வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாக ஆகும் என தெரிகிறது.

பாராட்டுக்கள்
குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் என பலரும் பாராட்டி வருகின்றனர். தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் பாலிவுட் பிரபலங்கள் என படம் பார்க்கும் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இரு வாரங்கள் கடந்தும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக கைதி ஓடி வருவதால், பத்திரிகை மற்றும் மீடியாக்கள் கைதி படத்திற்கு அதிக ரேட்டிங் கொடுத்து வருகின்றன.

100 கோடி
கார்த்தி நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த படமும் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸை நெருங்கவில்லை. 25 கோடி பட்ஜெட்டில் உருவான கைதி திரைப்படம் 12 நாட்கள் முடிவடைந்த நிலையில், உலகளவில் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை துருவ் விக்ரம் நடிப்பில் ரிலீசாகவுள்ள ஆதித்யா வர்மா படத்திற்கு, பிகில் பட தியேட்டர்கள் காட்சிகளை ஒதுக்க தயாராகி வருகின்றன. ஆனால், கார்த்தியின் கைதி திரைப்படம் தொடர்ந்து ஓடும் என்பதால், 100 கோடி வசூலை வரும் ஞாயிற்றுக் கிழமை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











