தீபாவளி ரேஸில் பிரின்ஸை பந்தாடிய சர்தார்… கார்த்தியின் ஆக்ஷனில் அடங்கிப் போன சிவகார்த்திகேயன்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
கடந்த வாரம் 21ம் தேதி வெளியான பிரின்ஸ், சர்தார் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முதல் 5 நாட்களில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வசூலில் கெத்து காட்டியுள்ளது.

தீபாவளி ரேஸில் பிரின்ஸ், சர்தார்
ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு டாப் ஹீரோக்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படங்கள் தீபாவளி தினத்தில் ரிலீஸாவது ரசிகர்களின் மிகப் பெரிய கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு சிவகார்த்திகேயன், கார்த்தி இருவர் மட்டுமே தீபாவளி ரேஸில் களமிறங்கினர். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும், கார்த்தியின் சர்தார் படமும் கடந்த வாரம் 21ம் தேதி வெளியானது. சர்தார் படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 600 திரையரங்குகளிலும், பிரின்ஸ் உலகம் முழுவதும் ஆயிரத்து 400 திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் வசூல்
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு எப்போதும் போல இந்தமுறையும் சிறப்பான ஓப்பனிங் கிடைத்தது. தெலுங்கில் வெளியான 'ஜதி ரத்னலு' மூலம் கவனிக்க வைத்த அனுதீப் பிரின்ஸ் படத்தை இயக்கியதால், தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் கிடைத்த தரமான ஓப்பனிங்கை, பிரின்ஸ் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் பாக்ஸ் ஆபிஸில் திணறியுள்ளது. இதுவரை 5 நாட்களில் 35 கோடி வரை மட்டும் வசூலித்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. டாக்டர், டான் என தொடர்ந்து இரண்டு படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், பிரின்ஸில் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டார்.

தூள்கிளப்பிய கார்த்தியின் சர்தார்
ஆனால், கார்த்தியின் சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது. சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்துடன் ஒப்பிடுகையில், சர்தாருக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் வெளியானது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில், ரா ஆபிஸர், போலீஸ் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார் கார்த்தி. ஆக்சன் ஜானரில் பக்கா கமர்சியலாக இருந்தாலும், திரைக்கதை, மேக்கிங் சூப்பர் என ரசிகர்கள் கூறியுள்ளனர். இதுபோன்று தொடர்ந்து பாசிட்டிவாக கிடைத்த விமர்சனங்கள், சர்தார் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளது. இதுவரை இந்தப் படம் 50 கோடி வசூலை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிவாவை வீழ்த்திய கார்த்தி
2019ல் கார்த்தியின் கைதியும், விஜய்யின் பிகில் திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதில், விஜய்யின் பிகில் படத்திற்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், கார்த்தியின் கைதி சத்தமே இல்லாமல் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலிலும் கைதி படம் தரமான சம்பவம் செய்தது. இப்போதும் அதேபோன்று சர்தார் படத்தில் மாஸ் காட்டியுள்ளார் கார்த்தி. இந்தாண்டு மட்டும் விருமன், பொன்னியின் செல்வன் என ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள கார்த்தி, இப்போது சர்தார் படத்திலும் தன்னை மினிமம் கேரண்டி சூப்பர் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் மோதி சர்தார் வெற்றிப் பெற்றிருப்பது, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால், கார்த்தியின் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications











