சர்தார் 5வது நாள் வசூல்… கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம்… ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…
சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் 21 திரையரங்குகளில் வெளியானது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சர்தார் படத்திலும் வசூலில் மாஸ் காட்டியுள்ளார் கார்த்தி.

கார்த்தியின் சர்தார்
கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து தீபாவளி ஸ்பெஷலாக வெளியான சர்தாரையும் ரசிகர்கள் சூப்பர் ஹிட் படமாக்கியுள்ளனர். பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கார்த்தி அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தண்ணீர் அரசியலை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், கார்த்தியின் கேரியரில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ரா ஆபிஸர், போலீஸ் என இரண்டு பாத்திரங்களில் நடித்துள்ள கார்த்தியுடன் ரஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

5ம் நாள் வசூல்
பிரின்ஸ் படத்துடன் மோதிய சர்தாருக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைக்கவில்லை. இதனால், முதல் நாளில் சர்தார் திரைப்படம் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்தது. ஆனால், பாசிட்டிவான விமர்சனங்களால் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த சர்தார், அடுத்தடுத்த தினங்களில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. ஏற்கனவே பிரின்ஸ் படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள், சர்தாருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. முதல் மூன்று தினங்களில் 30 கோடி வசூலித்த சர்தார், 5ம் நாள் முடிவில் 50 கோடியை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஹாட்ரிக் சூப்பர் ஹிட்
விருமன், பொன்னியின் செல்வன், இப்போது சர்தார் என ஒரே வருடத்தில் கார்த்தி நடித்த 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது. எப்போதுமே முதல் நாளில் மந்தமாக இருக்கும் கார்த்தியின் படங்கள், அடுத்தடுத்து நம்பர் ஒன் இடத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி விடுமுறை நேற்றோடு முடிந்துவிட்ட போதும், சர்தார் படத்துக்கான டிக்கெட் புக்கிங் இன்னும் பரபரப்பாகவே காணப்படுகிறது. அதனால், இனிவரும் நாட்களிலும் சர்தார் படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 100 கோடி
45 கோடி பட்ஜெட்டில் உருவான சர்தார், ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் 50 கோடியை கடந்துள்ள சர்தா, இந்த வாரம் இறுதிக்குள் 80 கோடி வரை வசூலிக்கலாம் என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரி ரிலீஸ் பிசினஸ், தியேட்டர் வசூல் இரண்டையும் சேர்த்தால் கண்டிப்பாக 100 கோடி வசூலை சர்தார் தொட்டுவிடும் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











