வா வாத்தியார் ரிலீஸ் தாமதம்.. அமீரின் சாபம்தான் காரணமாம்.. ஞானவேல் ராஜாவை வெளுக்கும் ரசிகர்கள்
சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் திரைப்படம் கடந்த பல மாதங்களாக ரிலீஸாகாமல் இருக்கிறது. அனைத்து பிரச்னைகளும் முடிந்து டிசம்பரி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் அமீரின் சாபம்தான் இப்படம் ரிலீஸாகாமல் இருக்க காரணம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
சூர்யாவின் தம்பியான கார்த்தி; அமீரின் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சிவாஜிக்கு பிறகு ஒரு ஹீரோவுக்கு முதல் படமே சில்வர் ஜுப்ளி கண்டது என்றால் அது கார்த்திக்குதான். பருத்திவீரனுக்கு பிறகு தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாக இருந்ததன் காரணமாக கார்த்திக்கு வெற்றி மேல் வெற்றி வந்துகொண்டே இருந்தது. இதனால் அவரும் தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களுக்குள் ஒருவராக இருக்கிறார்.
மெய்யழகனில் கலக்கிய கார்த்தி: அவரது 25ஆவது படமான ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு 96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்தார். படம் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் வணிக ரீதியான வெற்றி அதற்கு இல்லை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் மெய்யழகன்தான் சிறந்த படம் என்று நானி உள்ளிட்டோர் எல்லாம் புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

வா வாத்தியார்: இதற்கிடையே நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்தார் கார்த்தி. இதில் அவருடன் க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு சிறந்த படங்களை இயக்கியவர் நலன் என்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் பட்டையை கிளப்பி ரசிகர்களிடம் ஆவலை மேற்கொண்டு தூண்டியிருக்கிறது. ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.
தள்ளிப்போன ரிலீஸ்: நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. ஞானவேல் ராஜாவுக்கு இருக்கும் கடன் பிரச்னையால் இப்படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் முடித்து டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. அப்போது ரிலீஸாகவில்லை. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. அப்போது வெளியாகவில்லை. இப்படி பல தேதிகளுக்கு மாற்றப்பட்டாலும் படம் ரிலீஸாகததால் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள்.
அமீரின் சாபம்தான் காரணமா?: இந்நிலையில் அவர்கள் வருத்தமடைந்தது மட்டுமின்றி இன்னொரு விஷயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் பற்றி தரக்குறைவாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரை ஒருவர் கொச்சைப்படுத்தும்போது கார்த்தி ஞானவேல் ராஜாவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கார்த்தியோ எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் கடந்துவிட்டார். தன்னை அசிங்கப்படுத்தியவர்களுக்கு எதிராக அமீரின் சாபம்தான் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது என்ற பதிவுகளை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











