அமெரிக்காவில் தனுஷ்...டி 43 படப்பிடிப்பை அறிவித்த கார்த்திக் நரேன்
சென்னை : தனுஷ், தற்போது தான் நடிக்கும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் தான் தங்கி உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு, தற்காலிகமாக டி 43 என பெயரிடப்பட்டுள்ள, கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43 வது படத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பாத நிலையில், டி 43 படத்தின் சூட்டிங்கை விரைவில் துவங்க உள்ளதாக கார்த்திக் நரேன் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கார்த்திக் நரேன் பதிலளித்தார். அப்போது டி 43 படம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சில சுவாரஸ்ய தகவல்களை கார்த்திக் நரேன் வெளியிட்டார். அதில் அவர், தனுஷ் நடிக்கும் டி 43 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்ற தகவலை வெளியிட்டார்.
மேலும், மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன் இந்த படத்தில் நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் எப்போது படமாக்கப்படும் என இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். த்ரில்லர் கதையாக இயக்கப்பட உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மலையாள திரைக்கதை எழுத்தாளர் இரட்டையர்களான ஷர்ஃபு மற்றும் சுகாஸ் தான் இந்த படத்திற்கும் திரைக்கதை எழுத உள்ளனர். கார்த்திக் நரேன், அருண் விஜய்யை வைத்து இயக்கிய மாஃபியா படத்தில் நடித்த பிரசன்னா, இந்த படத்திலும் நடிக்க உள்ளார்.
தனுஷ் இன்னும் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை. கொரோனாவால் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கள் துவங்கப்படும் என யாருக்கும் தெரியாத நிலையில் கார்த்திக் நரேனின் இந்த அறிவிப்பு அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது. ஒருவேளை தனுஷ் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











