என் பெயரில் மோசடி நடக்குது.. இளம் நடிகர்கள் ஏமாற வேண்டாம்.. தனுஷ் பட இயக்குநரின் எச்சரிக்கை பதிவு!
சென்னை: இயக்குநர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடப்பதாக போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருவதாக எச்சரிக்கை செய்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் நரேன், தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.
கெளதம் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கிய அவர், அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த வருடம்
பின்னர் லைகா நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாஃபியா படத்தை இயக்கி இருந்தார். கம்மி பட்ஜெட்டில் துருவங்கள் பதினாறு கொடுத்த இம்பாக்ட் இந்த மீடியம் பட்ஜெட் படம் கொடுக்கவில்லை என்ற கலவையான விமர்சனங்கள் அந்த படத்திற்கு குவிந்தன.

டி43
மாஃபியா படத்தை முடித்த கையோடு, நடிகர் தனுஷ் நடிக்கும் 43வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு கிடைத்தது. சத்ய ஜோதி தயாரிக்கும் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை இந்த லாக்டவுனில் கார்த்திக் நரேன் முடித்துள்ள நிலையில், லாக்டவுனுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

இயக்குநர் பெயரில் ஏமாற்று வேலை
இந்நிலையில், தனது பெயரில், மர்ம நபர்கள் மோசடி வேலைகளை செய்து வருவதாகவும், டி43 படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான அழைப்புகளை இளம் நடிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் அது முற்றிலும் போலியானது. உங்களிடம் பணம் பறிக்க சிலர் இப்படி ஏமாற்று வேலைகளை செய்கின்றனர் என எச்சரித்துள்ளார்.

வாட்ஸப் நம்பர்
மேலும் 9777017348 என்ற வாட்ஸப் எண்ணில் இருந்து உங்களுக்கு என் பெயரில் ஏதாவது போலியான மெசேஜ் வந்தால் அதனை நம்பாதீர்கள், அந்த எண் என்னுடையதோ அல்லது என்னை சேர்ந்தவர்களுடையதோ அல்ல, அந்த எண் குறித்து புகாரும் அளித்துள்ளேன். நடிகர்கள் தேர்வு என பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்க என கார்த்திக் நரேன் அலர்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











