இப்போதும் ரசிகரை மறக்காத நவரச நாயகன் கார்த்திக்.. ஃபோன் செய்தெல்லாம் வாழ்த்துறாரே ப்பா
சென்னை: நவரச நாயகன் கார்த்திக்கிற்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவிய நிலையில்; கம்பு சுற்றி நடனம் ஆடிய வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அந்த வீடியோ மூலம் கார்த்திக்கின் உடல்நிலைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரியவந்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். இந்நிலையில் தனது ரசிகர் ஒருவருக்கு ஃபோன் செய்து திருமண நாள் வாழ்த்து சொன்ன வீடியோவும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகைகளையும் கவர்ந்த அவர்தான் 80ஸின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் எவ்வளவுக்கு எவ்வளவு புகழை பெற்றாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும்கூட சந்தித்திருக்கிறார்.
பாரதி கண்ணன் பேட்டி: அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவது, கொடுத்த தேதிகளில் ஷூட்டிங்கிற்கே வராமல் இருப்பது என அவரது செயல்களால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பேச்சுக்கள் ஓடுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழலில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக்கை சந்தித்து கதை சொல்ல போனேன். போகும்போதே ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸோடுதான் போனேன். அவர் என்னை பார்த்ததும் பொதுவாக பணத்தை நான் கையில் தொடுவது இல்லை அப்பா ஃபோட்டோவில் வைத்துவிடுங்கள் என்று சொன்னார். பிறகு தனது கழுத்தில் போட்டிருந்த செயினை தொட்டு பார்த்துவிட்டு இந்தப் படம் நன்றாக வரும் எனவும் ஆரூடம் சொன்னார். அதனையடுத்து திங்கட்கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன். அங்கு வந்து கதை சொல்லும்படி பணித்தார்.

ஒரே நேரத்தில் ஐந்து கிளாஸ்: அங்கு சென்றவர் ஃபோன் செய்து இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா என கேட்க; நான் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றேன். அங்கே அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றபோது டேபிளில் ஐந்து கிளாஸ்கள் இருந்தன. அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் மினரல் வாட்டரை ஊற்றி அடுத்தடுத்து குடித்தார். நான் கதை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு அதை மாற்றலாம் எனவும் சொன்னார்.
தயாரிப்பாளரின் முடிவு: இதற்கிடையே தயாரிப்பாளர் கார்த்திக்கை பற்றி விசாரித்துவிட்டார். என்னை தொடர்புகொண்டு அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார். நீ பணத்தை வாங்கிட்டு வந்திடு என்று சொல்லிவிட்டார். நான் சென்று கார்த்திக்கிடம், 'தயாரிப்பாளர் மனம் மாறிவிட்டார். உங்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறார்' என சொல்ல; அவரோ, 'பாரதி இந்த கார்த்திக்கிடம் பணம் வந்தால் மீண்டும் வராது என இன்டஸ்ட்ரிக்கே தெரியுமே' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பிறகு அந்தப் பஞ்சாயத்து விஜயகாந்த்திடம் சென்று பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுத்தார். கடைசிவரை அந்த பத்து லட்சத்தை என்னால் வாங்க முடியவில்லை" என்றிருந்தார்.
வீடியோ வெளியிட்ட கார்த்திக்: பாரதி கண்ணனின் இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆனதைத் தொடர்ந்து பலரும் நவரச நாயகன் பற்றிதான் பேசினார்கள். மேலும், கார்த்திக்கிற்கு உடல்நிலை சரியில்லை; அவரது நாட்களே வீல் சேரில்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றன என்றும் பேச்சுக்கள் கேட்டன. இப்படிப்பட்ட சூழலில் நேற்று கம்பு சுற்றியபடி நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி கார்த்திக் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்தது.
ஃபோன் செய்து வாழ்த்திய கார்த்திக்: இந்நிலையில் கார்த்திக்கின் ரசிகர் ஒருவர் இன்று தனது திருமண நாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ஃபோன் செய்த கார்த்திக் ரசிகரிடமும், ரசிகரின் மனைவியிடமும் தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. இதனை பார்த்த மற்ற ரசிகர்களோ இப்போதும் ரசிகரை மறக்காமல் ஃபோன் செய்து வாழ்த்துகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











