ரொம்ப பேசுகிறார்.. சுசித்ராவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றம் சென்ற முன்னாள் கணவர்
சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசித்ராவுக்கு அதிரடி உத்தரவை போட்டிருந்தது. இந்தச் சூழலில் மீண்டும் சுசித்ரா பேட்டி அளிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.
திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் மற்றொரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில் திரிஷா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் சுசித்ரா.
கார்த்திக்கின் பதிலடி: இதற்கிடையே தன்னை தன் பாலின ஈர்ப்பாளர் என்று சுசித்ரா சொன்னதற்கு பதிலடி கொடுத்த கார்த்திக், 'நான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளராக இருந்தால் அதனை வெளியில் சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சுசித்ரா இனி தன்னை பற்றி பேசக்கூடாது என்று கோரி ஒரு கோடி ரூபாய் எனக்கு அவர் தர வேண்டும் என மான நஷ்ட வழக்கை தொடர்ந்திருந்தார் கார்த்திக் குமார்.
அதிரடி உத்தரவு: அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையே சுசித்ரா சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அதில் பல விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில் கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீதிமன்ற தடையை மீறி சுசித்ரா தொடர்ந்து பேசுகிறார்' என்று கார்த்திக் தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது சுசித்ராவுக்கு நோட்டீஸ் சென்றடையாததால் வழக்கு விசாரணையை 22ஆம் தேதி ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.


Click it and Unblock the Notifications











