Mansoor Alikhan - த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்.. கார்த்திக் சுப்புராஜ் விளாசல்
சென்னை: Masoor Alikhan (மன்சூர் அலிகான்) த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
லியோ படம் கடந்த மாதம் வெளியானது. இதில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படமானது விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசுல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய் வசூலை படம் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்சூர் பேச்சு: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
த்ரிஷா கண்டனம்: மன்சூரின் அந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுப்பிய த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது.
மனித குலத்துக்கு இழுக்கு: என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு.
கார்த்திக் சுப்புராஜ்: மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த சூழலில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் வெறுக்கத்தக்க மனிதர்.. வெட்கப்படுகிறேன் மன்சூர் அலிகான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மன்சூர் விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரம் முற்றுவதை உணர்ந்துகொண்ட மன்சூர் அலிகான், "எனது பசங்க என்னிடம் செய்தியை சொன்னார்கள். என் படம் ரிலீஸாகும் நேரத்தில் (சரக்கு படம்) நான் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில் வேண்டுமென்றே யாரோ கொம்பு சீவி விட்டிருக்கிறார்கள். பழைய படங்கள் போல் கதாநாயகிகளுடன் நடிக்க முடியவில்லை என்பதைத்தான் நகைச்சுவையாக பேசியிருந்தேன்.
அதை கட் பண்ணி கலகம் பண்ண நினைத்தால் அதற்கெல்லாம் நான் பயப்படும் ஆள் கிடையாது நான், த்ரிஷாவிடம் தவறாக கட் பண்ணி காண்பித்திருக்கிக்றார்கள். நான் எப்போதும் நாயகிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஆள். நாட்டுல எத்தனையோ பிரச்னைகள் இருக்கு. போய் பொழப்பை பாருங்க” என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











