இவங்களும் இருக்காங்களாமே.. 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் இணைந்த கார்த்திக், யோகிபாபு!
சென்னை: அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் முன்னாள் ஹீரோ கார்த்திக்கும் இணைந்துள்ளார்.
Recommended Video
இந்தியில் ஹிட்டான படம், அந்தாதுன். அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்பட பலர் நடித்துள்ளனர்.
பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

பிரஷாந்த் ஹீரோ
3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி உள்ளார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இதுகுறித்து தியாகராஜன் கூறும்போது, ஸ்ரீராம் ராகவனின் 'ஜானி கட்டார்' திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்தேன். அந்த நட்பின் அடிப்படையில் இதன் ரீமேக் உரிமையையும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்' என்று தெரிவித்திருந்தார்.

பியானோ மாஸ்டர்
அந்தாதுன் படத்தின் கதை, பியானோ மாஸ்டரை பற்றியது. நடிகர் பிரஷாந்த், லண்டன் டிரினிடி கல்லூரியில் பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்றும் தியாகராஜன் கூறியிருந்தார். படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இந்தப் படத்தையும் ரீமேக் செய்கிறார்.

ரம்யா கிருஷ்ணன்
படத்துக்காக உடல் எடையை 23 கிலோ குறைத்துள்ளார் பிரஷாந்த். இந்தப் படத்தில் தபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் தபுவையே நடிக்க வைக்க முயற்சி நடந்தது. இப்போது அந்த கேரக்டருக்கு வேறு நடிகைகளிடம் பேசி வருகின்றனர். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக வந்த தகவலை தியாகராஜன் மறுத்துள்ளார்.

கார்த்திக், யோகிபாபு
இதற்கிடையே, இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கும் நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளனர். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜா ஸ்கிரிப்ட் வேலையை முடித்துவிட்டார். இன்னும் சில நடிகர், நடிகைகளிடம் பேசி வருகின்றனர். அரசு அனுமதி கிடைத்ததும் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











