தீபாவளிக்கு சரக்கு விற்பனையும் உங்க 500 கோடி வியாபாரமும் ஒன்னு தான்.. தங்கர் பச்சான் காட்டம்!
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் என சொல்லிக் கொள்ளும் எந்தவொரு நடிகருக்கும் சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது என வெளுத்து வாங்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
பாரதிராஜா, கெளதம் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ள தங்கர் பச்சான் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆதங்கப்பட்டு பேசியது அனைவரது கவனத்தையும் திருப்பி இருக்கிறது.

500 கோடி வசூல் செய்தால் நல்ல படமா என அவர் மறைமுகமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தையும் தாக்கி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
எம்ஜிஆரை போல யாருமில்லை: முன்னணி நடிகர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும் தான். அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன் தான் நான். கமர்ஷியல் படங்கள் எடுத்தாலும், அதில், பெற்றவர்களை மதிக்க வேண்டும், திருடாதே, ஏமாற்றாதே, பொய் சொல்லாதே, குடிக்காதே, சிகரெட் புகைக்காதே, அடுத்தவனை ஏமாற்றாதே என சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் தான் நிறைந்து காணப்படும்.
ஆனால், தற்போது முன்னணி நடிகர்கள் என சொல்லிக் கொள்ளும் ஒருவருக்காவது சமூக அக்கறை துளியும் இருக்கா என கோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களையும் துவம்சம் செய்து விட்டார் தங்கர் பச்சான்.
500 கோடி எடுத்தால் நல்ல படமா: கொஞ்சமாவது கூச்சமிருக்கா, 500 கோடி எடுத்து விட்டால் அது நல்ல படமா? அந்த படத்தில் என்ன இருக்கிறது. 1000 பேரை ஹீரோ சுட்டே சாவடிக்கிறான். 1000 துப்பாக்கிகளை காட்டி விட்டால் அது பெரிய பட்ஜெட் படம். இதுபோன்ற படங்களால் இளைஞர்கள் மத்தியில் இவர்கள் என்ன மாதிரியான விஷச்செடியை விதைக்கின்றனர் என்று தெரியுமா எனக் கேட்டு தனது மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார்.
இளைஞர்களை தவறான வழியில் நடத்தக் கூடாது என்றும் சினிமாவை வியாபாரமாக பார்க்காமல் கலைப்படைப்பாக பார்ப்பவர்கள் தான் நல்ல நடிகர்கள் என்றும் தீபாவளிக்கு அதிகமாக சரக்கு விற்பனையானது என விளம்பரம் செய்வது போலத்தான் உங்கள் 500 கோடி, 1000 கோடி வசூல் வெட்கக்கேடாக உள்ளது என அந்த மேடையில் தங்கர் பச்சான் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வில் ஸ்மித் உள்ளிட்ட நடிகர்கள் ஆக்ஷன் ஹீரோவாக இருந்த போதெல்லாம் அவர்களுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. கிங் ரிச்சர்ட் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தான் ஆஸ்கர் வென்றார் என்று தங்கர் பச்சான் பேசிய பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











